கொரோனா தடுப்பூசியை செலுத்தாவிட்டால் சிறை, பயணத்தடையை மீறினால் துப்பாக்கிச் சூடு, பன்றியின் ஊசி பலவந்தமாக வழங்கப்படும்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளக் குறைந்தளவிலான மக்களே சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டுப் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் பிலிப்பைன்ஸில் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு அந்நாட்டு மக்களிடமிருந்து குறைந்தளவிலான வரவேற்பே கிடைத்தது.
பெரும்பாலான பிலிப்பைன்ஸ் பிரஜைகள், பைஸர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறானவர்களுக்கு “பன்றிக்கு வழங்கப்படும் ஊசிகளை பலவந்தமாக வழங்க வேண்டும்“ என ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். தமது நாட்டு பிரஜைகள் சுயநலவாதிகள் என்றும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, இதற்கு முன்னதாக, பயணத்தடையை மீறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த கருத்து சர்வதேச ரீதியில் எதிர்ப்புகளை தோற்றுவித்திருந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர், பயணத்தடையை மீறிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியிருந்தனர்.
11 கோடி பேரை மொத்த சனத்தொகையாகக் கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரையில் 1.95 சதவீதமானோரே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச தடுப்பூசி செலுத்தல் கண்காணிப்பு குழுவான 'வெக்சின் ட்ரெக்கர்' தெரிவிக்கிறது.
எனினும், அந்நாட்டு அரசாங்கத்தின் புதிய அறிக்கைகளுக்கமைய, 84 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சுமார் 62 இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதல் செலுத்துகையும், சுமார் 21 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான அறிக்கைகளுக்கமைய அந்நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 இலட்சம் வரை உயர்வடைந்துள்ளது.
தற்போது அந்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான 56, 000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று அந்நாட்டில் 138 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,700ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment