Header Ads



ஈரக்குலை அறுக்கும் இஸ்லாமோஃபோபியா - கனடாவில் உயிருக்கு போராடும் 9 வயது பயாஸ் அப்சல்



மனித குலம் சந்திக்கக் கூடாத ஒன்று வெறுப்பு. வெறுப்பு உலக மக்கள் அனைவரின் வாழ்வையும் அறுத்துப் புதைத்துவிடும்.

ஒரே நாளில் ஒரே பொழுதில் ஏதும் அறியாத ஒன்பது வயது சிறுவன் அனாதையாகி நிற்கிறான். அம்மா, இதோ இப்போது வந்துவிடுவாள் என்று நம்பிக்கொண்டு மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். 

ஜூன் 6, 2021 ஞாயிறு லண்டன், ஒண்டாரியோ, கனடா. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். 

ஒரு சரக்கு வாகனம் வெறிபிடித்து அவர்கள் மீது கொடூரமாய்த் தாக்குகிறது. அந்தக் குடும்பம் அப்படியே சாவுக்குள் விழுந்து மூச்சை நிறுத்திக்கொள்கிறது. கடைக்குட்டிச் சிறுவன் மட்டும் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டு கிடக்கிறான். 

ஏன் இந்த வெறிச் செயல்? அந்தக் குடும்பத்திற்கும் சரக்கு வாகனம் ஓட்டிய 20 வயது நதானியல் வெல்ட்மேனுக்கும் ஏதேனும் முன்விரோதமா?

மோதியவனுக்கும் மோதியதால் மாண்ட அப்பாவிக் குடும்பத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அந்த 20 வயது மிருகத்தின் நெஞ்சில் முஸ்லிம்களின் மீதான வெறுப்பு மிதமிஞ்சி குடிகொண்டிருக்கிறது. அதன் பெயர் இஸ்லாமோஃபோபியா.

46 வயது கணவர் சல்மான் அஃப்சல், 44 வயது மனைவி மதிஹா சல்மான், 15 வயது மகள் யும்னா அஃப்சல், 74 வயது அம்மா தலாத் அஃப்சல் நால்வரும் அந்த இடத்திலேயே மாண்டுபோகிறார்கள். 9 வயது மகன் ஃபயஸ் அஃப்சல் மட்டும் உயிர்தப்பி மருத்துவமனையில்.

தன் குடும்பம் மொத்தத்தையும் சில நொடிகளில் பறிகொடுத்துவிட்டு மருத்துவமனையில் கிடக்கும் அந்த ஒன்பது வயது சிறுவனாக என்னை ஒரு நொடிகூட கற்பனைசெய்து பார்க்க முடியவில்லை.

மூன்று தலைமுறையையும் மூன்றே நொடிகளில் தகர்த்தெறிந்த இந்தக் கொடிய செயலின் தாங்க முடியாத பேரதிர்ச்சி நாடு முழுவதும் கொரோனாவைவிட கொடியதாய்ப் பரவிக்கிடக்கிறது.

இதுபோன்ற நிகழ்வில் இயல்பாகவே குடிகொள்ளும் உச்சகட்ட அச்சத்தில் பல முஸ்லிம் குடும்பங்கள் தம் பிள்ளைகளை நினைத்து பீதியால் உறைந்துபோய் இருக்கின்றன.

8ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு லண்டன் மசூதிக்கு வெளியே அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் மத வெறுப்பால் கொலையுண்ட முஸ்லிம் குடும்பத்தை நினைத்து கண்ணீர் மல்க ஒன்றுகூடினர்.

“இஸ்லாமோஃபோபியா உண்மையானது. இனவாதம் உண்மையானது. உங்கள் சமூகத்தில், உங்கள் நாட்டில் அந்த வெறுப்பை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை. நம்மால் முடியும் நாம் செயல்படுவோம். நம்மால் முடியும், நாம் இதற்கு ஒரு சிறந்த வழியைத் தேர்ந்தெடுப்போம்.”என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். 

”இத்தனை அழகான ஒரு நாட்டில் இத்தனை அற்புதமான ஒரு மாகாணத்தில் எப்படி இப்படி ஒரு கொடிய செயல் நடக்க முடியும்?” என்று ஒண்டாரியோ பிரிமியர் டக் ஃபோர்ட் ஆதங்கப்பட்டார்.

"ஒட்டுமொத்த கனடிய மக்களும் இந்த தாக்குதலைக் கையாள்வதில் உங்களுடன் நிற்கிறது" என்று கன்சர்வேடிவ் தலைவர் கூறினார்

“சிறுபான்மையினர் மீதான இந்த வெறுப்பு உமிழ்வை நினைத்து பயத்தில் மூழ்கிவிட மாட்டோம்" என்று என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கூறினார்.

இந்தக் கொடூரமான சம்பவத்தை தங்கள் குழந்தைகளுக்கு விளக்க எங்கள் சமூகம் போராடி வருகிறது என்று லண்டன் மசூதியின் துணைத் தலைவர் கூறினார்.

தலைவர்களின் இரங்கல் செய்திகள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் பேச்சோடு நின்றுவிடுமா அல்லது நாடு தழுவி இனி ஒருபோதும் இதுபோல் நிகழாத வண்ணம் காரியங்கள் முடுக்கிவிடப்படுமா என்பதே சில ஆய்வறிஞர்களின் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்காகவும் அதன் நம்பிக்கைகளில் அமைதியாக வாழ்வதற்காகவும் சிறுபான்மையினர் கொடூரமாய் தண்டிக்கப் படுவார்களா? அதுவும் எங்கே? இந்த உலகிலேயே முதன்மைத் தரத்தில் உள்ள வெகுசில நாடுகளில் ஒன்றிலா? கருணைக்கும் அன்புக்கும் பெயர்போன இந்த நாட்டில் இப்படி ஒரு கேடுகெட்டச் செயலா? 

நெஞ்சு நம்ப மறுக்கும் இப்படியான கொடுஞ் செயலைச் செய்வோரை அரசு சர்வ நிச்சயமாக ஒடுக்கத்தான் வேண்டும். ஏனெனில் இது முதன் முறையல்ல. இது போன்ற இஸ்லாமோஃபோபியா இதற்குமுன்னும் கனடாவில் அரங்கேறி இருக்கிறது.

இப்படியான தீவிரவாதத்தை எதிர் கொள்ள நிச்சயமாக சிறுபான்மை இளைஞர்கள் தாங்களும் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துவிடக் கூடாது. சரியான விழிப்புணர்வை நாடு முழுவதும் அதற்காக நாம் விதைக்க வேண்டும்.

எந்த வகையில் வந்தாலும், இஸ்லாம் தீவிரவாதத்தை முற்று முழுதாக எதிர்க்கிறது. ஓர் உயிர் கொல்லப்பட்டால் இந்த உலக உயிர்கள் அத்தனையும் கொல்லப்பட்டதற்குச் சமம் என்றே இஸ்லாம் கூறுகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழனின் உயரிய பண்பாடுகள் இந்த உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திட வேண்டும்.

உலகின் அத்தனை இணத்தவரும் அத்தனை மதத்தவரும் நல்லிணக்கத்தோடு கட்டித் தழுவிக்கொண்டு வாழவேண்டும்.

”உன் வழி உனக்கு என் வழி எனக்கு நாம் சகோதரரகள்” என்பதே குர்ஆன் கூறும் நல்லிணக்க மந்திரம். 

ஒவ்வொரு இனமும் தனித்தனியே தங்களின் ஒன்றுகூடல்களையும் நிகழ்ச்சிகளையும் செய்யாமல் எல்லா இணத்தவரும் எல்லா மதத்தவரும் ஒன்றிணைந்து ஒரு கல்லூரி நிகழ்வைப்போல அவற்றை நடத்த வேண்டும்.

இஸ்லாமோஃபோபியா மட்டுமல்ல அத்தனை வெறுப்பு ஃபோபியாக்களும் உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வேரோடு அழித்தெடுக்கப் படவேண்டும். அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்ற வேண்டும்.

அன்புடன் புகாரி

No comments

Powered by Blogger.