நீர்கொழும்பில் ஏப்ரலுக்குப் பிறகு 9 ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் அடக்கம் - தழுவகொட்டுவ தொழிற்சாலையில் 300 பேருக்கு PCR பரிசோதனை
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவில் கொரோனா மரணம் 38 ஆக உயர்ந்துள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 2100 ஆக அதிகரித்துள்ளதாக முகாமைத்துவ பொது சுகாதார பரிசோதகர் வசந்த சோலங்காரச்சி தெரிவித்தார். புது வருட கொத்துக்குப் பின்னரே மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீர்கொழும்பில் பல்வேறு பிரதேசங்களிலும் மரணம் சம்பவித்துள்ளன. இதில் 9 பேரின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இதேவேளை நீர்கொழும்பு சுகாதார பிரிவினரால் தழுவகொட்டுவையில் அமைந்துள்ள இலக்ரோனிக் தொழிற்சாலையில் 300 பேர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 41 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை தனியார் நிறுவனமொன்றில் பிசிஆர் பரிசோதனை செய்துள்ளனர். அதில் நான்கு பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனால் தொழிற்சாலை நிர்வாகம் நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவினரின் முடிவை ஏற்க மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கம்பஹா சுகாதார வைத்திய பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் சுகாதாரபிரிவின் முடிவை ஏற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் நிர்வாகம் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென கூறுகின்றனர்.
சுகாதார பிரிவினர் கம்பஹா காரியாலயத்திலிருந்து முடிவு வரும்வரை காத்திருக்கின்றனர்.
Post a Comment