காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டு, 4 திருமணத்திற்கும் தடை, மணமகளின் கையொப்பமும் அவசியம் - அமைச்சரவையில் தீர்மானம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் அமுலில் இருந்து வரும் காதி நீதிமன்ற முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அத்தோடு முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். திருமணத்துக்கு மணமகளின் சம்மதம் பெறப்பட்டு பதிவில் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனை குழுவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாக குழுவின் தலைவரும் வக்பு சபையின் தலைவருமான சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரித்தார்.
என்றாலும் காதிநீதிமன்ற முறைமையை இல்லாதொழிக்காது அதன் கட்டமைப்பை மேம்படுத்துமாறும் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆலோசனைக்குழு அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது எனவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்கமளிக்கையில், ‘காதி நீதிபதிகள் மற்றும் அவரது தகைமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதால் இக்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் சட்டத்தரணிகளாகவும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் அறிவுள்ளவராகவும் சட்டத்தரணியாக 5 வருட அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் என குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவர்கள் 25 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஏனைய நீதிபதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற பயிற்சிகள் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். சமரச முயற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு ஏனைய நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். காதி நீதிமன்ற கட்டமைப்பினை மேம்படுத்துவதன் மூலம் இதன் செயற்பாடுகளை உச்ச நிலைக்கு கொண்டுவர முடியும்.
காதிகள் மேன்முறையீட்டு சபைக்கு நியமனம் பெறும் உறுப்பினர்களின் தகைமைகள் தொடர்பிலும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் 10 வருட அனுபவம் கொண்ட சட்டத்தரணிகளாக, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அறிவுள்ளவராக 35 – 65 வயதுக்குட்டபட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டள்ளன.
காதி நீதிமன்ற முறைமையை மேம்படுத்துவதா என்பது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும். இம்முறைமை இல்லாமலாக்கப்பட்டால் திருமணம் தொடர்பான விடயங்களுக்கு மாற்றுத் தீர்வாக குடும்ப நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும். குடும்ப நீதிமன்றம் நிறுவப்படாத பட்சத்தில் மாவட்ட நீதிமன்றினையே மாற்றுத் தீர்வாக கொள்ள வேண்டும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றத்தினூடாக நிர்வகிக்கப்பட முடியும் எனவும் ஆலோசனைகள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் 2020.12.31ஆம் திகதி 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்களைத் தவிர முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் காதி முறைமைக்கு உட்பட்ட ஏனைய விடயங்களை மையப்படுத்தி தனது முன்மொழிவுகளை அறிக்கையாக கடந்த திங்கட்கிழமை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் சமர்ப்பித்தது.
ஆலோசனைக் குழுவுக்கு ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். திருமணப் பதிவில் மணமகளின் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். பெண்கள் காதி நீதிபதிபளாக நியமிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் காதிநீதிமன்ற முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். முஸ்லிம் ஆண்களின் பலதார மணம் தடை செய்யப்பட வேண்டும் என 2021.03.08 ஆம் திகதிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலோசனைக்குழுவுக்கு 2021.04.29ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை ஆலோசனைகளை ஊக்குவித்தல் திருமணத்துக்கு முன்னரான ஒப்பந்தங்களை அங்கீகரித்தல் திருமண சமரச செயற்பாடுகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்தல் போன்ற முன்மொழிவுகளையும் குழு சமர்ப்பித்துள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளங்குதல், இஸ்லாமிய சட்டவியல் அரசியலமைப்பு கோட்பாடுகள், ஏனைய நியாயாதிக்கங்களில் காணப்படுகின்ற சட்டமாதிரிகள் என்பன குழுவின் கலந்துரையாடலில் செல்வாக்கு செலுத்தியதாகவும் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலிலுள்ள சட்டத்தில் ‘வொலி’யின் பிரசன்னம் அவசியமாகும். என்றாலும் இது தொடர்பில் குழு அங்கத்தவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. ‘வொலி’ அவசியமில்லை என இருவர் முரண்பட்டனர். இந்நிலையில் மணப்பெண்ணின் விருப்பம் இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை மக்களுக்கு மிகவும் அவசியமான தீர்வுகளை இச்சீர்திருத்தங்கள் வழங்கும் என குழு ஆத்மார்த்தமாக நம்புகிறது. முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு சமத்துவம் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய ஒரு முடிவை மேற்கொள்ளுமாறு இக்குழு அமைச்சரவையை வேண்டுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக்குழு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழு 2018இல் சமர்ப்பித்த சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் ஏனைய அமைப்புகள் தனியார்களின் சிபாரிசுகளையும் கவனத்தில் கொண்டு அறிக்கை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli
Now goverment want to turn/forget other crisess isues example oil prices and life expensives so going to open muslims files.
ReplyDeleteமுஸ்லீம் தனியார் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் காலத்திற்கு காலம் சில மாற்றங்கள் உள்வாங்கப்பட்டாலும், இம்முறை அமைச்சரவை மேற்கொண்டுள்ள மாற்றங்கள் பல பாதகமான அதிர்வலைகளை தோற்றுவிக்கக் கூடும். காரணம், இப்புதிய சீர்திருத்தங்கள் புரட்சிகரமானவை என சிலர் கருதினாலும் அவற்றின் சில பகுதிகள் இஸ்லாமிய சட்ட வரம்புகளை மீறும் தன்மை கொண்டதாகத் தோன்றுகின்றன.
ReplyDeleteமுன்மொழிவுக்காக தெரிவு செய்யப்பட குழுவினர், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இரு வெவ்வேறுபட்ட முன்மொழிவுகளை முன்வைத்தமையால் அரச தரப்பினர் தமக்கு சாதகமான முன்மொழிவை ஏற்று அதனை சட்டமாக்க விளைகின்றமை தெளிவு.
ஆனால், கால, சமூக மாற்றங்களுக்கேற்ப முஸ்லிம் பெரும்பன்மை நாடுகளில் கூட முஸ்லீம் தனியார் சட்டத்தில் பல மாற்றங்கள் சரிஆவின் எல்லைக்குள் நின்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் அத்தகைய மாற்றங்களை உள்வாங்கத் தயங்கி, பாரம்பரிய சட்ட மரபிற்குள் மட்டுமே நின்றதால் தமக்கு இலகுவான விதத்தில் ஒரு குழுவின் சீர்திருத்தங்களை மட்டுமே அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளமை தெளிவாகின்றது.
நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான முன்மொழிவுகள் சரிஆவின் இலக்குகளுக்கு முரணானவை என்று சொல்ல முடியாவிட்டாலும், அதில் சில மாற்றங்களுடன் முஸ்லீம் சமூகம் ஒருமித்ததாக தமது முன்மொழிவை வழங்கிருந்தால், இத்தகைய ஒரு நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருக்காதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பால் ஏற்ற்த்தாழ்வின்றி அனைத்து முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விவாதம் மிகவும் sensitive வான விடயமாக உள்ளது. இந்த விவாதத்துக்கு பல முஸ்லிம் நாடுகளும் முகம் கொடுத்து சில மாற்றங்களை செய்து வருகிறது. எந்த நீதிமன்றமாயினும் எந்த மதத்து பெண்கள்ஆயினும் கண்ணீர் சிந்ததாத சூழலை உருவாக்க தவறினால் தோற்றுப்போகும். முஸ்லிம் நாடுகளில் உள்ள விவாதங்களை அங்கு ஏற்படுகிற மாற்றங்களை கூர்ந்து கவனிப்பது முன்னுதாரணமாக கொள்வது அவசியம்.
ReplyDeleteஇனி இதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஒன்றிணைந்து ஒரே முடிவை எடுத்து உள்ளூர் சர்வதேச மட்டத்தில் அதனை முன்னெடுத்தால் ஒரு நியாயமான நல்ல முடிவொன்றை எதிர்பார்க்கலாம். அதுதவிர ஒவ்வொருவரும் அவரவர்களுடைய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொட்டித் தீர்ப்பதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.
ReplyDelete