இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் செல்லவோ, பயண ஏற்பாடுகளில் ஈடுபடவோ வேண்டாம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக இவ்வருடமும் இலங்கையர்களுக்கு ஹஜ் கடமைக்கான வாய்ப்பு இல்லையெனவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு முஸ்லிம்களை வேண்டியுள்ளது.
ஷவ்வால் பிறை 7இல் சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் திறக்கப்படும் என சவூதி அரேபியா ஏற்கனவே அறிவித்திருந்தபோதும் விமான நிலையங்கள் திறக்கப்படவில்லை. அத்தோடு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளின் விமானங்களுக்கும் சவூதி அரேபிய அரசு தடைவிதித்துள்ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இவ்வருட ஹஜ் யாத்திரையை கண்டிப்பான சுகாதார வழிகாட்டல்களுடன் அனுமதிக்கவுள்ளதாகவும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இவ்வருடத்துக்கான ஹஜ் யாத்திரைக்கு செயல்முறைத்திட்டமொன்றினை விரைவில்அறிவிக்கவுள்ளதாகவும் சவூதி ஹஜ் அமைச்சு தெரிவித்திருந்தாலும் இதுவரை அவ்வாறான அறிவிப்பு இலங்கைக்கு கிடைக்கவில்லை.
அவ்வாறான அறிவிப்பு கிடைக்கப்பெற்றாலும் இவ்வருடம் இலங்கையில் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வது சாத்தியப்படமாட்டாது.
ஏனென்றால் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் 14 நாட்கள் இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு சவூதி அரேபியாவிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எனவே தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களையே புனித தலங்களில் அனுமதிக்க முடியும் என ஏற்கனவே சவூதி அறிவித்துள்ளது. இவ்வாறான நடைமுறைகளினால் ஹஜ் யாத்திரை சாத்தியப்படமாட்டாது.
சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் ஹஜ் யாத்திரை தொடர்பான அறிவிப்புகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்படும் என்றார். – Vidivelli
பலகாலம் பாடுபட்டு பாவமன்னிப்பில் ஈடுபட்டு ஈமான் ஈரம் காயக்கூடாது என்று காத்திருந்து கவலை படுபவர்கள் சிலரிருக்க, பணத்தாசை பிடித்து பாவத்தில் உழைத்து பழகிய பலர் தமது பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பயணம் போய் வார வருடாந்த வழக்கத்தை இனி என்ன செய்யப் போகிறார்கள்?
ReplyDelete