ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் - பிரதமர்
தகவல் தொடர்பு தற்போது உலகில் மிக வேகமாக முன்னேறிவரும் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் பல்வேறு ஊடகங்களின் ஊடாக தகவல்கள் பொதுமக்களை சென்றடையும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.
எனினும், சுயாதீனமான மற்றும் பொறுப்பான ஊடக பாவனையே காலத்தின் தேவையாகும். முறையான ஊடக பயன்பாட்டின் மூலமே மக்களின் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
அதற்காக பணியாற்றுவது அனைவரதும் பொறுப்பும், கடமையுமாகும் என நான் நம்புகின்றேன்.
இந்நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
முழு உலகமும் தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் 'தகவல்கள் பொதுமக்களின் நலனுக்கானது' எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை கொண்டாடுவது காலத்திற்கு உகந்ததாகும்.
நாடு என்ற ரீதியில் இந்த தொற்றுநோயை எதிர்கொண்டு, அதனை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் பொதுமக்களை தெளிவுபடுத்தி, உயிராபத்தையும் பொருட்படுத்தாது ஊடகவியலாளர்கள் நிறைவேற்றும் இந்த உன்னத செயற்பாட்டையும், அர்ப்பணிப்பையும் அரசாங்கம் எப்போதும் பாராட்டும்.
அறிவை ஆயுதமாகக் கொண்ட ஊடகவியலாளர்களின் தொழில் வளர்ச்சிக்காக கல்வி புலமைப்பரிசில்கள் மற்றும் ஊடக உபகரணங்களை வழங்குவதற்கான எமது நடவடிக்கை எதிர்காலத்திலும் செயற்படுத்தப்படும்.
துல்லியமான செய்திகளை அறிந்துக் கொள்வதற்கான மக்களின் உரிமையை பாதுகாத்து, நாட்டின் ஒட்டுமொத்த சமூக, கலாசார மற்றும் பொருளாதார அபிலாஷைகளை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்
Post a Comment