Header Ads



தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி , சஜித் பிரேமதாசவிடம் விடுத்துள்ள சவால்


மேற்கத்திய நாடுகளின் தூதுவர்களுடனான பேச்சுவார்த்தை என்​ன என்பதை சஜித் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கத்திய நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு அழைத்து அவசர பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தார்.

அதன்போது என்ன பேசப்பட்டது? நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பில் அங்கு பேசப்பட்டதா? என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென மேற்படி கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு உரிமை உள்ளது என்றும் அன்றைய தினம் கவனம் செலுத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்குமுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஜெனீவா மனித உரிமை பேரவையில் எமது நாட்டுக்கு எதிராக யோசனைகளை சமர்ப்பித்த தரப்பினருடன் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அவசரமாக நடத்திய பேச்சுவார்த்தை நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையா? என்றும் அந்த கட்சி கேள்வி எழுப்புகிறது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் யுத்தத்துக்கு எதிராகவும் நாட்டின் அபிவிருத்திக்கு எதிராகவும் நாட்டுக்கு துரோகம் விளைவிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பயணித்த பாதையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் பயணிக்கின்றாரா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

சர்வதேசமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற கூற்றும் அதனையே சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி பயணித்த தேசத்துரோக பாதையை சஜித் பிரேமதாசவின் கட்சியும் தேர்ந்தெடுத்துள்ளதா? எதிர்க்கட்சியின் கடந்த ஒரு வருட அரசியலை பார்க்கும்போது அவ்வாறுதான் புலப்படுகிறது . இத்தகைய பின்னணியில் கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தூதுவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் நோக்கம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாட்டுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமென அக்கட்சி கோரியுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.