நீர்கொழும்பில் ஜும்ஆ மஸ்ஜித் அருகில் கோபுரம் - மக்கள் எதிர்ப்பு, பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் மக்கள் குடியாட்டம் நிரைந்த பிரதேசத்தில் டயலொக் நிறுவனத்தின் கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
பெரியமுல்லை, ஜும்ஆ மஸ்ஜித் மாவத்தையில் சவுண்டஸ் வீதிக்கு திரும்பும் இடத்தில் பிரதான வீதிக்கு அருகில் இது அமைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபையின் எந்தவொரு உத்தியோகபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்றே தெரியவருகின்றது.
இரவோடு இரவாக இந்த உயரமான கோபுரம் நிறுவப்பட்டுள்ளது.
இக் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு முன்னால் சுமார் 20 அடி தூரத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. 100 மீட்டர் தூரத்திற்குள் மற்றொரு நிறுவனத்தின் கோபுரம் நிறுவப்பட்டுள்ளன. பிரபல பாடசாலை, முன்பள்ளி பாடசாலை, குர்ஆன் மத்ரஸா என்பன இதன் சுற்றுவட்டத்தின் அருகாமையில் உள்ளன.
நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளது.
பெரியமுல்லை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி மேயர் பரீஸை தொடர்பு கொண்டு கேட்டபோது இக்கோபுரம் அமைக்க மாநகர சபை அனுமதி வழங்கவில்லை எனக்கூறிய அவர் இது தொடர்பாக மேயர் தயான்லான்ஸாவுடன் பேசியபோது இதனை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மக்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.
நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் ருவன்தியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது நகர பிதா அனுமதி வழங்கியுள்ளதாக கூறியதுடன் பாடசாலை மாணவர்களுக்கு "சூம்" தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி கற்பதற்கு வசதியாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொலைதொடர்பு கோபுரங்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.
கட்டிடம் ஒன்றை அமைக்கும் போதும் வீதியின் மத்தியிலிருந்து குறித்த தூரத்திற்கு அப்பால் அமைக்க அனுமதி வழங்குவதுண்டு. இல்லையெனில் சட்டவிரோத கட்டிடம் என்று அதனை நகரசபை தகர்க்க நடவடிக்கை எடுக்கும். ஆனால் இந்தக் கோபுரம் அமைக்க எந்த விதிமுறையும் பின்பற்றப் படவில்லை என்றே தோன்றுகின்றது.
இதனை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பகும்.
Post a Comment