கொரோனா 3 ஆவது அலை, முஸ்லிம்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தற்போது பரவிவருகின்ற உருமாறிய கொரோனா வைரஸானது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் போக்கு ஒன்றைக் காண்பிப்பதாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தேசிய ஒளடத அதிகார சபையின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் வைரஸ் தாக்கமானது அயல் நாடான எமக்கு பாரிய சவாலாகும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பயணங்களைத் தவிர்க்குமாறும் கோரியுள்ளார்.
சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கும் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கும் வழிகாட்டல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு பயான், கியாமுல்லைல், இஃதிகாப் மற்றும் தௌபா நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பலர் முகக்கவசம், முஸல்லா இன்றி பள்ளிவாசல்களில் தொழுவதை காணமுடிகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரு மீற்றர் இடைவெளிகூட அசட்டை செய்யப்படுகிறது.
மக்களை வழிகாட்டல்களுக்குள் உட்படுத்துவதில் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்வதாக பள்ளிவாசல் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. நாம் எம்மையும், சமூகத்தையும் நாட்டையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் ஏனைய சமூகங்கள் எமது சமூகத்தின் மீதே விரல் நீட்டும் நிலை உருவாகும். இந்நிலையில் வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் உலமா சபை பிரதிநிதிகளிடம் இது குறித்து கருத்து வினவினோம். அவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு தருகிறோம்.
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன்
நாட்டில் தற்போது புதுவகையான கொரோனா வைரஸ் பரவிவருவதாக சுகாதார துறை தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது. இதுவரைகாலம் பரவிய கொரோனா வைரஸ் தொற்றினை விடவும் உருமாறிய அல்லது புதிய வகையான வைரஸ் என்பதை அறிய முடிகிறது. இந்நிலையில் மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் “வீரியம் மிக்க இந்த புதிய கொரோனா வைரஸ் காற்றில் ஒன்றரை மணித்தியாலம் தங்கியிருக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ரமழான் நோன்பினை அனுஷ்டித்து வரும் நிலையில் நாம் பள்ளிவாசல்களில் அதிகளவில் கூடுவதால் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதனால் நாம் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.ஏனைய மதஸ்தலங்களில் இடம் பெறும் வழிபாடுகளைவிட முஸ்லிம்களின் வழிபாடுகளின்போது வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு உள்ளது.
நாம் தொழுகையின்போது நிலத்தை தொடுகிறோம். சுஜூதின்போதும் நிலத்தை தொடுகிறோம். வுழூச் செய்யும்போது எமது எச்சில்களை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறான வழிபாடு ஏனைய சமூகங்களிடம் இல்லை. எனவே தான் முஸ்லிம்கள் அவதானம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.’கொரோனா 3ஆவது அலையை முஸ்லிம்களே உருவாக்கினார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு இடமளிக்காத வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டால் பள்ளிவாசல்களை மூடிவிடவேண்டிய நிலைமை ஏற்படும்.அத்தோடு வக்பு சபைக்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய நிலைமை உருவாகும் என்றார்.
மு.ச.ப. திணைக்கத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப்
கொவிட் 19 வைரஸ் பரவலிலிருந்தும் எமது பள்ளிவாசல்களையும், சமூகத்தையும் நாட்டையும் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பள்ளிவாசல்கள் மூடப்படாமல் இருப்பதற்கும், எமது ரமழான் அமல்கள் பள்ளிவாசல்களில் தொடர்வதற்கும் நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதனால் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள கொவிட் 19 தொடர்பான வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘எமது நாட்டின் ஏனைய சமூகங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் தொடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடிக்கின்றன. நாட்டில் மீண்டும் வீரியமான கொவிட் 19 வைரஸ் தொற்று பரவி வருவதாக அரசாங்கம் கடந்த 13 ஆம் திகதி அறிவித்தது. இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சிங்கள, தமிழ் மக்கள் 14ஆம் திகதி தங்களது புத்தாண்டை கொண்டாடவில்லை. அத்தோடு கடந்த 22 ஆம் திகதி தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும்பாலான மக்கள் பயணங்களைத் தவிர்த்துக் கொண்டனர். எனவே நாமும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து இந்த வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதிதாக பரவிவரும் வைரஸ் காற்றில் 1½ மணி நேரம் தங்கியிருக்கக் கூடியது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் பரவிய வைரஸ் பொருட்கள் மீது மாத்திரமே தங்கியிருந்தது. எனவே நாம் எப்போதும் மாஸ்க்கை கழற்றாமல் இருக்க வேண்டும். மாஸ்க் அணிவதன் மூலம் தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.
நோயாளிகள், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பள்ளிவாசலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் வுழூச் செய்து கொண்டே பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும். தொழுகைகளை வீடுகளிலே நிறைவேற்றிக் கொள்வது சிறந்ததாகும்.
தொற்று நாம் எதிர்பாராத இடங்களில் இருக்கலாம். ஊரடங்கு உத்தரவினைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தேவையில்லாமல் பயணம் செய்தால் நீங்கள் அறியாமல் வைரஸை உங்களுடன் எடுத்துச் சென்று உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தலாம். எனவே பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.
இக்கடினமான சூழ்நிலையில் வீட்டில் தங்கியிருப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும். நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறியுள்ளார்கள். ‘தனக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது. பிறருக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது. எவர் மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தீங்கு செய்வான். எவன் ஒருவன் மற்றவர்களுக்கு கஷ்டம் ஏற்படுத்துகிறாரோ அவனுக்கு அல்லாஹ் கஷ்டம் ஏற்படுத்துவான்.
வீட்டை விட்டு வெளியேறாதிருப்பதன் மூலம் சமூகத்தை பாதுகாக்க உதவுங்கள். அக்கம்பக்கத்தில் சுற்றித்திரிவதற்குக் கூட வீட்டைவிட்டு வெளியேறுவது முழு சமூகத்தையும் ஆபத்தில் ஆழ்த்திவிடும்’ என்றார்.விடிவெள்ளி
Post a Comment