காத்தான்குடி பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிப்பு - திருகோணமலை Mp இம்ரான் கவலை
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
இவ்வருட அபிவிருத்தியில் காத்தான்குடிப் பாடசாலைகள் முற்றாகப் பறக்கணிப்பட்டுள்ளமை கவலையைத் தருகின்றது. இது நிவர்த்திக்கப்பட வேண்டும். இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வருட பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து எந்தவொரு பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை என்ற தகவலை அங்குள்ள சில பிரமுகர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
காத்தான்குடிக்கு தலைமைத்துவம் இல்லாததால் இந்தப் புறக்கணிப்பு ஏற்பட்டதா என்ற சந்தேகம் வெளியிட்டிருக்கும் அவர்கள் இது தொடர்பாக சமுகவலைத்தளங்களில் வெளிவந்துள்ள சில பதிவுகளையும் எனக்கு அனுப்பியுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்த்தியின் கிழக்கு மாகாண எம்.பி என்ற வகையில் இந்த விடயத்தை உரிய தரப்புக்கு எத்திவைத்து காத்தான்குடிக்கு நிவாரணம் பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் எல்லாப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இவ்வருட அபிவிருத்திக்காக பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் காத்தான்குடி பிரதேச பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்ற சந்தேகம் எழுவது இயல்பானது தான்.
இவ்வாறு ஒரு குறித்த பிரதேசத்தை மட்டும் புறக்கணித்துள்ளமை குறித்து நான் கவலை அடைகின்றேன். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்று சிலர் குறிப்பிட்டாலும் இது எங்கோ ஏற்பட்ட தவறு என்றே நான் கருதுகின்றேன்.
எனவே, இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும். தவறு எங்கே உள்ளது என்பதை இனங் கண்டு அதனைத் திருத்தி காத்தான்குடிப் பாடசாலைகளையும் இவ்வருட அபிவிருத்தியில் உள்வாங்க நவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் எம்.பி கேட்டுள்ளார்.
Post a Comment