நோன்பு பெரும் அருட்கொடை, ரமழானின் பயன்கள் முழுமையாக கிடைக்க பிரார்த்திக்கின்றேன் - ரெஹான் (சுவாரசியமான நேர்காணல்)
பதில்: நான் கீழ் மட்டத்திலிருந்து அரசியலை ஆரம்பித்திருக்கிறேன். அதாவது நகர சபையிலிருந்தே ஆரம்பமாகியிருக்கிறது. ஆனாலும், எமது குடும்பத்தினரின் அரசியல் செல்வாக்கும் தாக்கம் செலுத்தியிருந்தது. எனது பெற்றோர்களோ, குடும்பத்தாரோ அரசியலில் ஈடுபட்டிருப்பது அரசியலுக்கான தகுதியோ தகுதியீனமோ அல்ல. ஆனாலும், எனது அரசியல் பிரவேசத்திற்கு குடும்ப அரசியல் பின்னணி சாதகமாக அமைந்தது.
கேள்வி: உங்கள் குடும்பத்தினர் அண்மைக்காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததை பார்க்கிறோம். திடீரென 2018 இல் உங்கள் பிரவேசம் நிகழ்ந்தது.இதற்கு ஏதும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா?
பதில்: எமது குடும்பத்தில் கூடுதலானோர் அரசியல் செய்திருக்கின்றனர். அரசியல் செய்த எமது குடும்பத்தின் மூன்றாம் சந்ததியில் நான்தான் முதன்முதலாக அரசியலில் பிரவேசித்துள்ளேன். எனது சகோதரர்கள் அரசியலுக்கு வரவில்லை. வேறு தொழில்களில் கவனம் செலுத்துகின்றனர். டி.எஸ்.சேனாநாயக்க குடும்பத் தொடர்பும் ரஞ்சன் விஜேரத்ன மற்றும் மண்டெக் ஜெயவிக்ரம உள்ளிட்ட மூன்று பெரும் அரசியல் குடும்பத்தின் பரம்பரையை பிரதிபலிக்கிறேன்.
கேள்வி: வெலிகம என்பது பல்லின மக்களை பிரதிபலிக்கும் தொகுதியாகும். நாட்டிலுள்ள இனவாத சூழல் உங்கள் அரசியல் பயணத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகிறது?
பதில்: வெலிகம நகர் முஸ்லிம்களின் செல்வாக்குமிக்க ஒரு பகுதி. இங்கு ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைமைகள் இருந்தபோதிலும் அவர்கள் அங்குள்ள முஸ்லிம் மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து துணிவுடன் பேச முன்வருவதில்லை. வெலிகம மக்களுடன் இணைந்து செயற்படுவதால் அங்குள்ள சிங்கள மக்கள் என்னுடன் கோபித்ததில்லை. வெலிகம சிங்கள மக்களும் முஸ்லிம்களுடன் ஒன்றித்து வாழ விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர். இதை இன்றைய புதிய மாற்றமாக காண்கிறேன்.
கேள்வி: தெற்கிலிருந்து இன்னொரு மங்கள உயிர்பெறுகிறார் என்று எங்களால் நம்ப முடியுமா?
பதில்: மங்கள சமரவீர கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தவர். என்னை வெலிகம நகர பிதாவாக பரிந்துரைத்தவர். மங்கள ஒரு தீவிர தாராளவாத அரசியல்வாதி, உண்மையை உரைக்க பயப்படமாட்டார். எல்லா மதத்தினரையும் மதிக்கும் தன்மைகொண்டவர். மங்கள என்கிற ஆளுமை (தனித்துவம்)அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூற முடியாது. அவர் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்றும் ஊகிக்க முடியாது. எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு அரசியல் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். தெற்கில் அவ்வாறான ஆளுமை (தனித்துவம்) மிகவும் குறைவு. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவ்வாறான ஆளுமைகள் மாவட்டம்தோறும் அதிகமதிகமாக தேவைப்படுகின்றனர். அப்போதுதான் நாட்டை கட்டியெழுப்பலாம். எதிர்கால சந்ததியினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, இன,மதவாதத்திலிருந்து விலகி ஒண்றிணைந்து செயற்படும் கொள்கையை பின்பற்றுவார்களேயானால் நாம் முன்னேற்றம் காண முடியும்.
கேள்வி: கொவிட் ஜனாஸா பிரச்சினை நாட்டில் உருவானபோது, வெலிகம பகுதியில் பலவந்தமாக எரிப்புக்கான முஸ்தீபு இடம்பெறவிருந்த நிலையில் நீங்கள் அதனை தடுத்திருந்தீர்கள். நீங்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததா?
பதில்: என்னுடைய கொள்கைகள் மற்றும் இயல்புகளை என்னால் கைவிட முடியாது. எனது கட்சியில் எனக்கு அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கவும் இல்லை. வெலிகமயில் ஜனாஸா எரிப்பு முஸ்தீபு நடந்தமை எனது பாராளுமன்ற பொதுத் தேர்தல் காலமாகும். நான் முஸ்லிம் வாக்குகளை இலக்காகக்கொண்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தினர். மாத்தறை மாவட்டத்தில் 80 வீதம் சிங்கள வாக்குகள்தான் இருக்கின்றன. முஸ்லிம் மக்களின் வாக்குகள் 30 ஆயிரம் வரையில்தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த வாக்குகளை மட்டும் இலக்குவைத்து செயற்பட நான் முட்டாள் அல்ல. என்னுடைய இயல்புதான் ஜனாஸா விடயத்தில் நியாயமாக செயற்படவைத்தது. ஒவ்வொரு இனக் குழுமத்திலும் கடும்போக்குவாதிகள் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் சிங்கள சமூகத்தில் எனக்கு வாக்குகள் இல்லாமல் போயிருக்கலாம். குறித்த சந்தர்ப்பத்தில் மாத்தறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் மௌனித்து இருந்த போது நான் பேசியதை மாத்தறை மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கு அறிவார்கள்.
கேள்வி: தெற்கில் சில உள்ளூராட்சி மன்ற அதிகார பகுதிகளில் தவிர பெரும்பாலான பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் அதிகாரத்தின் கீழிருக்கும் வெலிகம பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என உங்கள் மீது ஏதும் அழுத்தங்கள் வருவதுண்டா?
பதில்: எனது தீர்மானத்தில் பிரதமரோ, ஜனாதிபதியோ இதுவரை தலையிடவில்லை. ஏனைய பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் நான் எந்த தடைக்கும் இடமளிக்கப்போவதில்லை. ஏனையோருக்கு மாட்டிறைச்சி சாப்பிடுமாறு வற்புறுத்தவுமில்லை, மாட்டை கொல்லுமாறு சொல்லவுமில்லை. மாத்தறை நகரில் முஸ்லிம்கள் 20 வீதமானவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மாட்டிறைச்சி உட்கொள்கின்றனர். அவர்களை தடுக்க முடியாது. மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்பது எனது விருப்பம். எனது விருப்பத்தை எல்லோருக்கும் திணிக்க முடியாதல்லவா. இங்கு மாட்டிறைச்சி விற்பதை தடுக்கக்கோரி பெரிய அழுத்தங்கள் ஏதுமில்லை.
கேள்வி: நீங்கள் நோன்பு நோற்கப்போவதாக அறிவித்திருந்தீர்கள். நோன்பு பிடித்தீர்களா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?
பதில்: முதலாம் நாள் எனக்கு இலகுவாக இருந்தது. இரண்டாம் நாள் எனக்கு பெரிதாக கஷ்டம் இருக்கவில்லை. முன்றாம் நாள் நோன்பும் சாதாரணமாகவே சென்றது. ஆனால் நான்காம் நோன்பன்றும் ஐந்தாம் நாளன்றும் தவறுதலாக நீர் அருந்திவிட்டேன். தவறாக நீர் அருந்துவது நோன்பை முறிக்காது என்று தெரிந்திருந்தேன். ஆகையால், அவ்விரு தினங்களும் நோன்பை தொடர்ந்தேன்.நோன்பு நேர அட்டவணையை கையடக்கத் தொலைபேசியில் வைத்திருக்கிறேன். அதன்படி நோன்பு பிடிப்பதை பேணுகிறேன். இந்த நேர அடிப்படையில் நேற்று (கடந்த ஞாயிறன்று) முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் பேரர்களோடு வீட்டில் நோன்பு துறந்தேன். நோன்பு நோற்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. நோன்பு இருப்பதால் உடம்பிலுள்ள மேலதிக கொழுப்பு இல்லாமலாக்கப்படுகின்றது.
கேள்வி: முஸ்லிம்கள் இறை பொருத்தத்திற்காக நோன்பு நோற்கின்றார்கள். நோன்பு நோற்பதால் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
பதில்: இலங்கை தாயகத்தில் பௌத்தர்களாகிய நாங்கள் மூத்த சகோதரர்கள், இளைய சகோதரர்களை பொறுப்புடன் பார்த்துக்கொள்வது மூத்த சகோதரர்களின் கடமையாகும். அவர்களுடன் யுத்தம் செய்வதோ, கொல்வதோ எமது கொள்கையாக இருக்கலாகாது. அவர்களை அரவணைக்க வேண்டும். எல்லா முஸ்லிம்களும் அடிப்படைவாதிகள் அல்லர். அப்படி கூறுவது தவறாகும். எல்லா சமூகத்திலும் கடும்போக்குவாதிகள் இருக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் நீண்ட காலமாக ஒன்றிணைந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டன. இந்நிலைமையை ஏற்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளே. நியூஸிலாந்து பிரதமரைப் போல், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து அந்நியோன்னியமாக இருப்பது எப்படி என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. முஸ்லிம்களுடன் மட்டுமல்ல, தமிழர்களுடன் ஒன்றிணைந்து அவர்களுடன் தைப்பொங்கல் கொண்டாடவும் இருக்கிறேன். நான் நோன்பு இருப்பதன் பிரதான நோக்கம், இலங்கையிலுள்ள எல்லா சமூகத்தவர்களினதும் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கேயாகும். சிங்கள பௌத்தனாக இருந்துகொண்டு ரெஹான் எங்களுடன் இணைந்து நோன்பு நோற்கிறார் என்று முஸ்லிம்கள் கூறுகின்றார்கள் அல்லவா? சமூக வலைத்தளங்களிலும் கூடுதலானவர்கள் இவ்வாறான கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.
கேள்வி: நீங்கள் நோன்பு நோற்பது குறித்து பகிரங்கமாக அறிவித்த பின்னர் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எவ்வாறான வரவேற்புகள் கிடைத்தன?
பதில்: திருகோணமலை, பெந்தொட்ட, பேருவளை, கொழும்பு, பாசிகுடா என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தினந்தோறும் எனது தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கின்றனர். எனது வீட்டுக்கு வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். மாலையாகும்போது பலர் நோன்புக் கஞ்சி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அதிகாலையில் உணவு உட்கொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றனர். நோன்பு துறப்பதற்கு வரச்சொல்கின்றனர். 30 நாட்கள்தான் இருக்கிறது. ஆனால், நூற்றுக் கணக்கானோர் அழைப்பு விடுக்கின்றனர்.
கேள்வி: நோன்பு நோற்க, துறப்பதற்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில்: எனக்கு அதிகாலையில் சாப்பிட்டால் கேஸ் ரைட்டிஸ் அதிகரிக்கும், அதனால், பேரீத்தம் பழங்களும் பாலும் உட்கொள்வேன். நோன்பு துறந்த பின்னர் கஞ்சி, பலூடா உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வேன். முதலாம், இரண்டாம் நோன்புக்கு 4.35 மணியாகும்போதுதான் விழித்தெழுந்தேன். எனினும், உடனடியாக பிரிஜ்ஜில் இருந்த பேரீத்தம் பழங்கள் மற்றும் பால் என்பவற்றை உட்கொண்டேன்.
கேள்வி: சிங்கள புதுவருடமும் நோன்பு ஆரம்பித்ததும் ஒரே நாளாகும். அப்படியான நிலையில் உங்களின் புதுவருட சடங்குகளை எப்படி ஒழுங்குப்படுத்திக் கொண்டீர்கள்?
பதில்: எங்கள் வீட்டில்தான் எமது குடும்ப புதுவருட சடங்குகள் இடம்பெற்றன. அனைத்து சடங்குகளிலும் கலந்துகொண்டேன். உணவுகளை மாத்திரம் வேறாக எடுத்து வைத்து நோன்பு துறக்கும் நேரத்தின் பின்னர் உட்கொண்டேன். இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
கேள்வி: சில தினங்கள் நோன்பு நோற்றுள்ளீர்கள். அந்த அனுபவத்தை வைத்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: நோன்பு காலம் மிகவும் கஸ்டமான காலம். அத்தியாவசிய செயற்பாடுகளை தவிர்ந்துகொள்ள வேண்டிய நாட்கள் இவை. ரமழான் நோன்பு முக்கியமான வைபவமாகும். உங்களுக்கு பெரும் அருட்கொடையாகத்தான் நோன்பு கிடைத்திருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனைவருக்கும் ரமழானின் பயன்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli ,எஸ்.என்.எம்.சுஹைல், எம்.ஆர்.எம்.வஸீம்
Very good exemplary politician, he should enter the national level leadership to lead this country forward...
ReplyDelete