"இந்தியாவின் கொரோனா இலங்கையில் பரவினால், அதனை எதிர்கொள்வது மிக கடினம்"
(நா.தனுஜா)
இந்தியாவில் பரவிவரும் நிலைமாற்றமடைந்த கொரோனா வைரஸ் இலங்கையில் பரவத்தொடங்கினால் அதனை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும். இந்நிலையில் பிரதேச எல்லைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் சுகாதாரத்துறை முழுமையாக சீர்குலையும் நிலையேற்படும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
தொற்றுநோய்த்தடுப்பு நிபுணர்கள் ஒரு சுமுகமான நிலையைக் காண்பித்து, அரசாங்கம் தவறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கிறார்கள் என்று நான் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதத்திலிருந்து கூறிவருகின்றேன்.
நீர்த்துப்போன தீர்மானங்களின் விளைவாக நாம் கடந்த அக்டோபர் மாதத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அலைக்கு முகங்கொடுத்தோம்.
அதேபோன்று கொரோனா வைரஸின் தன்மை நிலைமாற்றமடைவதால் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் தனிமைப்படுத்தல் மற்றும் பிராந்தியக்கட்டுப்பாடுகளை வலுப்படுத்துமாறும் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நானும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ரவி குமுதேஷ் ஆகியோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுமாத்திரமன்றி தடுப்பூசிகள் தொடர்பில் நீர்த்துப்போன கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி நான் சில கட்டுரைகளையும் எழுதினேன்.
அவ்வாறிருந்தும் எங்களது வேண்டுகோளையும் மீறி பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 16,000 இலிருந்து 3,000 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு சில தினங்கள் முன்னர் நான் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இந்தியாவில் பரவிவரும் நிலைமாற்றமடைந்த வைரஸ் தொடர்பில் எச்சரித்ததுடன் அது இலங்கைக்குப் பரவினால் அதனை எதிர்கொள்வது கடினம் என்றும் கூறியிருந்தேன்.
இராணுவத்தளபதி, பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஆகியோரைத் தவிர, தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவின் அதிகாரிகள் இந்த அபாயத்தின் தீவிரத்தன்மையை மக்களுக்கு உணர்த்தவில்லை.
இந்நிலையில் தற்போதெனினும் தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவின் அதிகாரிகளால் தவறாக வழிநடத்தப்படுவதிலிருந்து மக்கள் விலகிக்கொள்ள வேண்டும். தொழில்சாலைகள் மாத்திரம் செயற்படுவதற்கு அனுமதியளிக்கும் வகையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் பகுதியளயவில் முடக்கப்பட வேண்டும்.
கடைகள், சந்தைகள் மூடப்படுவதுடன் பிராந்திய எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட வேண்டும். இவை முன்னெடுக்கப்படாவிட்டால், நாட்டின் சுகாதாரத்துறை முழுமையாக சீர்குலைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். வீரகேசரி
Post a Comment