நான் வீட்டுக் காவலில் இருக்கிறேன் - ஜோர்டானின் முன்னாள் பட்டத்து இளவரசர்
மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்சா பின் ஹுசேனின் காணொளி ஒன்று அவரது வழக்கறிஞர் மூலமாக பிபிசிக்குக் கிடைத்தது. அந்த காணொளியில் பேசும் ஹம்சா, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் திறனற்றவர்களாகவும் ஊழல்வாதிகளாகவும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்.
ஜோர்டானில் மன்னரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்குச் சதி நடப்பதாகக் கூறி பல முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஹம்சாவின் வீடியோ வெளியாகி உள்ளது.
இளவரசர் ஹம்சா வீட்டுக் காவலில் இருப்பதாகக் கூறப்படும் தகவலை ராணுவம் மறுத்துவிட்டது.
ஆயினும் ஜோர்டானின் "பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும்" தீங்கு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும்படி ஹம்சாவுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறியுள்ளது.
அண்மையில் பழங்குடி இனத் தலைவர்களைச் சந்தித்த இளவரசர் ஹம்சா அவர்களிடம் ஆதரவு திரட்டியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை ஹம்சா மறுக்கிறார். தாம் எந்தத் தவறும் செய்யவில்லை, எந்தச் சதித்திட்டத்திலும் தமக்குப் பங்கில்லை என்று அவர் கூறுகிறார்.
அப்துல்லாவுக்கு ஆதரவு
ஜோர்டானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், மன்னர் அப்துல்லாவுக்கு மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளான எகிப்தும் சவுதி அரேபியாவும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஜோர்டானின் உதவியைப் பெற்றிருந்த அமெரிக்காவும், அப்துல்லாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.
யார் இந்த ஹம்சா?
மறைந்த மன்னர் ஹுசேன் மற்றும் அவருக்கு பிடித்தமான மனைவி நூர் ஆகியோரின் மகன் ஹம்சா. பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் படித்தவர். ஜோர்டானின் ராணுவத்தில் பணியாற்றியவர். 1999-ஆம் ஆண்டு தந்தை இறந்தபோது அப்துல்லா மன்னரானார். ஹம்சா பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
1999இல் மன்னர் ஹுசேன் மறைவுக்கு பின் இவர் மன்னர் ஆவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இவருக்கு அனுபவம் போதாது என்று கருதப்பட்டதால், அப்துல்லா மன்னராக அறிவிக்கப்பட்டார்.
2004-ஆம் ஆண்டு ஹம்சாவின் பட்டத்து இளவரசர் என்ற அங்கீகாரத்தை அப்துல்லா பறித்தார். இதனால் ராணி நூர் அதிருப்தியடைந்திருந்தார்.
குறைந்த அளவு இயற்கை வளங்களையே கொண்டிருக்கும் ஜோர்டானின் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிரியாவில் இருந்து வரும் அகதிகளும் அந்த நாட்டுக்குப் பெருஞ்சுமையாக இருக்கின்றனர். BBC
Post a Comment