முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டமைக்கு ஒருசில, அரசியல் தலைமைகளின் தவறுகளே காரணம் - அதாஉல்லா ஸகி
- NOORUL HUTHA UMAR -
சமகாலத்தில் நாட்டின் முக்கிய தேவை இன நல்லுறவு. இனங்களுக்கு மத்தியிலான சந்தேகங்களும், பிரிவினைகளும் களையப்பட வேண்டும். பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் நமது வகிபாகம் என்ன என்பதை உணரத் தலைப்பட வேண்டும். அது போல் இதர சமூகங்களின் வகிபாகம் என்னவென்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில் இன நல்லிணக்கமும், ஐக்கியமும் பிரதானமானது. அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் பரஸ்பர உறவு பேணப்படுவதுடன், சமாதானத்தையும் சகவாழ்வையும் நாம் உள்ளார்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலாநிதி. அல்ஹாபிழ் எம்.ஐ.எம். சித்தீக் எழுதிய "பல்லின சமூகங்களுக்கிடையிலான உறவைப் பேணல்" ஓர் இஸ்லாமிய நோக்கு எனும் நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை நிலைநாட்டும் வேலைத் திட்டம் பாடசாலை மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். இதற்கு பாடசாலை அதிபர்கள் முழு மூச்சாய் செயற்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும். இன்று முஸ்லிம்கள் இந்த நாட்டில் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட சமூகமாய் மாற்றப்பட்டமைக்கு, நமதான ஒரு சில அரசியல் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட வரலாற்று தவறுகளும் காரணங்களாய் அமைந்திருக்கின்றன. இவர்களின் சுய நல அரசியல் காரணமாக நாட்டில் பிளவுகளும், பிரிவினைவாதங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் மத்தியில் நிம்மதி இல்லை என்று நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். நமது சிறிய விடயங்களும் பூதகாரமாக்கபடுகின்றன. எமது சமூகத்தின் மத்தியிலும் இவ்வாறான ஒரு சில நபர்கள் இருந்து கொண்டு விஷமத்தனங்களை கக்குகின்றனர். நமது எண்ணமெல்லாம், நாடு வளம் பெற வேண்டும். அனைத்து சமூகங்கள் மத்தியிலும் ஐக்கியம், சுபீட்சம் ஏற்பட வேண்டும் என்பது தான். அதற்காகவே நாம் சதா சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவற்றை குழப்பவும் சிலர் முயற்சிக்கின்றனர். நாட்டிலே ஏற்பட்டுள்ள ஒரு சில பிணக்குகள், இன முரண்பாடுகளுக்கு அப்பால் தேசப்பற்றுடன் நமது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய தேவையிருக்கிறது. நாம் முதலில் நம்மை வெல்ல வேண்டும்.
இன்று நமது மத்ரஸாக்கள் எனும் போது அவை அடிப்படைவாதம் போதிக்கப்படும் இடம் எனும் பிழையான கற்பிதங்களும், புரிதல்களும் பேரின மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகள் தோன்றுவதற்கு எம்மிடையே புற்றீசல்கள் போல முளை விட்டிருக்கும் இயக்கம், கொள்கை, பிரிவினை வாதங்களும் முக்கிய வழி வகுத்திருப்பதனை நாம் ஏற்றுக்கொண்டு அவற்றிலே சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். மதப்பெரியார்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் இம்முயற்சிகளில் கூடிய கரிசனை செலுத்திட வேண்டும்.
இந்த நாட்டில் மக்கள் மத்தியில் சமாதானமும், சகவாழ்வும், மீளவும் கட்டியெழுப்பட வேண்டியதோர் முக்கியமான காலப் பகுதியில் கலாநிதி. அல்ஹாபிழ் எம்.ஐ.எம்.சித்தீக் அவர்கள் இந்த நூலை வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற ஆக்கபூர்வமான சமூக சிந்தனைகளுக்கு, பங்களிப்புகளுக்கு என்றும் எனது காத்திரமான ஒத்துழைப்புகள் தொடரும் என்று மேலும் தெரிவித்தார்.
Post a Comment