சரத் பொன்சேகா பற்றி யாரும் எனக்கு, டியூசன் எடுக்க தேவையில்லை - மனோ சீற்றம்
சரத் பொன்சேகா, அதை செய்தார், இதை செய்தார் என குற்றப்பத்திரிக்கை எழுதி எனக்கு அனுப்புகிறார்கள்.
ஏதோ, எனக்கு ஒன்றும் தெரியாதது போல் எழுதும் இவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
சரத் பொன்சேகாவை, 2010ம் வருடம் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட வைப்பதில் முக்கிய பங்காற்றிவன், நான். எனவே அவரை பற்றி யாரும் எனக்கு டியூசன் எடுக்க தேவையில்லை.
நேற்று முதல்நாள், சரத் பொன்சேகா பேசிய பேச்சின் முக்கியம் என்னவென்றால், “இராணுவ வீர்ர்கள் தமிழ் மக்களை கொலை செய்துள்ளார்கள்” என்பதை முதன் முதலாக முன்னாள் இலங்கை இராணுவ தளபதி பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார், என்பதுதான்.
இந்த உண்மையை கூறியதால்தான், நான் அவரை பாராட்டினேன்.
அதேபோல் சில மாதங்களுக்கு முன் அவருடன் சபையில், மரணித்தோரை நினைவுகூறல் தொடர்பில் மோதிக்கொண்டதை மக்கள் மறக்க கூடாது.
மற்றபடி அவரது வரலாறு, எதிர்காலம், பற்றி இதில் நான் தொடர்புபடுத்தவில்லை.
இனி இலங்கையில், நாம் இவர்களுடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது.
அவ்வப்போது கண்டிக்க வேண்டிய நேரத்தில் முரண்பட்டு அப்புறம் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி, தட்டிக்கொடுத்து, தட்டி திருத்தி, பயணிக்க வேண்டியுள்ளது.
இதுதான் என் வழி. எனக்கு தெரிய வேறு வழி இல்லை.
ஏனெனில் வரலாறு முழுக்க தமிழ் தலைவர்களும் தவறு செய்துள்ளார்கள். சந்தர்ப்பங்களை தவறு விட்டுள்ளார்கள்
புதிய தலைமுறை குறிப்பாக 90, 2000களில் பிறந்த தமிழ் இளையோர் (Tamil Kids of 90s, 2000s) வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஏதோ தமிழ் தலைவர்கள் பிழையே செய்யாதவர்கள் போலவும், முக்கியமாக “வரலாறு தந்த சந்தர்ப்பங்களை” ஒருபோதும் தவறேவே விடாத “ராஜதந்திரிகள்” போலவும், இன்னமும் நம்மில் சிலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
உண்மையில், ஆரம்பமே கோணல். முதற்கோணல் முற்றிலும் கோணலாக்கி விட்டுள்ளது.
1940களில் தெற்கில் இருந்து சிங்கள அரசியல்வாதிகள் சமஷ்டி கோரிக்கை எடுத்து வந்தபோது, வடக்கின் அறிவாளி தமிழ் தலைமை அதை பெரிய எடுப்பில் நிராகரித்தது.
“பாகிஸ்தானை கொடுத்து விட்டு போ” என கூறிய முஹமத் அலி ஜின்னா மாதிரி, “1560 களில் போத்துகீசியர் முதலில் கைப்பற்றிய யாழ்ப்பாண ராஜ்ய நாட்டை எமக்கு கொடுத்து விட்டு போ” என சுதந்திரத்துக்கு முன்னமேயே, கடைசி பிரித்தானிய ஆளுனர்கள் டொனமூரிடமும், சோல்பரியிடமும் அறிவாளி தமிழ் தலைமை சொல்லவில்லை.
(இவர்கள் ஏன் இப்படி சொல்லவில்லை என இன்னொருநாள் கூறுகிறேன்..!)
அப்புறம் 1987ம், 2000ம் ஆண்டுகளில் “சந்திரிகாவின் தீர்வுபொதி” மற்றும் “இலங்கை-இந்திய ஒப்பந்தம்” மூலமாக வந்த ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு சந்தர்ப்பங்களை அன்றைய தமிழ் தலைமை தவற விட்டது.
இதை வாசித்து விட்டு, எனக்கு சந்திரிகா மீதும், இந்தியா மீதும் குற்றப்பத்திரிக்கை எழுதி அனுப்ப வேண்டாம்.
சந்திரிகா, இந்தியா ஆகியோர் எவ்வளவு “யோக்கியர்கள்” என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், “அவர்கள் நலன் அவர்களுக்கு”. “எங்கள் நலன் எங்களுக்கு”.
எவர், எதை, எவரை, எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதுதான், இங்கே தலைமைக்கு அவசியமான தகைமை.
மனோ கணேசன் Mp
வெளிப்படையான மனக்கிடைக்கை. சரியான சுட்டிக் காட்டல்.
ReplyDelete