முஸ்லிம் அமைப்புகள் வெளிநாட்டு, நிதியுதவிகள் பெற புதிய கட்டுப்பாடுகள் - அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கும் ஆப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளைத் தவிர, ஏனைய முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என்பன வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் பெற்றுக் கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
வெளிநாடுகளில் நிதியுதவி பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிபாரிசு கடிதத்தினை பெற்றுக் கொள்வதற்கு வருகை தரும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட பிரதேசங்களின் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடமிருந்து கடிதங்களையும் மற்றும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவள்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
அத்தோடு எந்த நாட்டிலிருந்து, எந்த அமைப்பிடமிருந்து, என்ன தேவைக்காக நிதியுதவி பெற்றுக் கொள்ளப்படப் போகிறது என்பதை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ள திட்டத்தின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தங்களது கடந்த 3 வருட கால கணக்காய்வு அறிக்கை மற்றும் செயற்பாட்டறிக்கை என்பனவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான சிபாரிசினை பெற வருபவர்கள் இந்நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகள் மூலம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் திணைக்களத்தினால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியெனக் கண்டால் புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனூடாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனே நிதியுதவிகள் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.- Vidivelli
Post a Comment