Header Ads



நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலுக்கு இமாமாக உயர்ந்த ரோஹிங்கியரின் கதை - முதலாவது குர்ஆன் மொழிபெயர்ப்பும் வெளியாகியது

- Aashiq Ahamed -

1950 காலக்கட்டம். பர்மிய இராணுவத்தின் அடக்குமுறைகளில் இருந்து தப்பிய ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பம் ஒன்று சவூதி அரேபியாவின் மக்காவில் தஞ்சம் அடைகிறது. இக்குடும்பத்தின் தலைவரோ பர்மிய சிறையில் அடைக்கப்பட்டிருக்க, குடும்பத்தை காக்கும் பொறுப்பு சிறுவர்களில் மூத்தவரான முஹம்மது அய்யூப் மீது விழுகிறது. கல்வி கற்றுக்கொண்டே குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் இச்சிறுவன்.

இன்றைய கட்டுமான முன்னேற்றங்கள் அப்போது மக்காவில் இல்லை. சிறுவனான அய்யூப், தான் கல்வி கற்கும் பள்ளிவாசலுக்கு செல்ல இரு மலைகளில் ஏறி இறங்க வேண்டும். கூடவே பாலைவன நாய்கள் மற்றும் இன்ன பிற ஆபத்துகளையும் எதிர்க்கொள்ள வேண்டும். இப்படியாக கல்வி பயின்றவர் படிப்படியாக உயர்கிறார். குர்ஆனை மிக அழகிய முறையில் ஓதும் திறன் பெற்றிருந்த முஹம்மது அய்யூப், மதீனாவின் பள்ளிவாசல்களில் ஒன்றில் இமாமாகிறார்.

அய்யூப் அவர்களின் குர்ஆன் ஓதும் திறன், நபிகள் நாயகத்தின் பள்ளியான மஸ்ஜிதுன் நபவியின் தலைமை இமாமான ஷேக் அப்துல் அஜீஸ் அவர்களை எட்ட, பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். யாரும் எதிர்பாரா வண்ணம், ஒரு கூட்டத்தில், அய்யூப் அவர்களை குர்ஆன் ஓத சொல்கிறார் அஜீஸ். தன்னுடைய வசீகரமான குரலில் குர்ஆனை மிக அழகான முறையில் அய்யூப் அவர்கள் ஓத, கூட்டத்தினர் மெய்மறந்து கேட்கின்றனர்.

சிலிர்த்து போன ஷேக் அப்துல் அஜீஸ், எதிர்வரும் இரமலானில் (1990-ஆம் ஆண்டு), இரவு நேர தராவிஹ் தொழுகையை இமாமாக இருந்து நடத்தும் பொறுப்பை முஹம்மது அய்யூப் அவர்களிடம் ஒப்படைக்கிறார். இதனை கேட்டபோது தன் இதயத்துடிப்பு வேகமெடுத்தாக பின்னாளில் தெரிவித்தார் ஷேக் முஹம்மது அய்யூப். மிகவும் ஒடுக்கப்பட்ட  சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் இஸ்லாமின் அதிமுக்கிய புனித தளங்களில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலுக்கு இமாமாக உயர்ந்த கதை இது.

இன்றும் சொல்லிமாளாத துயரங்களை அனுபவிக்கின்றனர் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஆனால் ஷேக் முஹம்மது அய்யூப் போன்ற தங்கள் இனத்தவரின் முன்னேற்றம் இவர்களின் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. தங்களின் உற்சாகத்தை இங்கிருந்தும் ரோஹிங்கியாக்கள் பெறுகின்றனர். இதோ, இந்த இரமலானில், தங்கள் மொழியில் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒலி/ஒளி வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள் ரோஹிங்ய முஸ்லிம்கள். இந்த மொழிபெயர்ப்பில் பின்னணியில் ஒலிப்பது ஷேக் முஹம்மது அய்யூப் அவர்களின் குரலே.

இதுநாள் வரை ரோஹிங்ய மொழியில் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு இல்லையா என்று சிலர் ஆச்சர்யப்படலாம். ஆம் அதுதான் உண்மை. நீண்ட நெடுங்கால பர்மிய அடக்குமுறை இவர்கள் மொழியை எழுத்து வடிவில் வளரவே விடவில்லை. இருந்த நூல்களும் பர்மிய அரசால் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் இவர்கள் மொழி பேச்சு வழக்கில் தான் உயிர் வாழுகிறதே ஒழிய, எழுத்து வடிவில் இல்லை. உண்மையில், 1980-களுக்கு பிறகு தான், வெளிநாடுவாழ் ரோஹிங்கிய முஸ்லிம் அறிஞர்களின் முயற்சியால் இவர்கள் மொழிக்கு புதிய எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன.

இதுவும் கூட இன்னும் முழுமையாக இவர்களிடம் சென்றடையவில்லை. ஆக, எழுத்து வடிவில் இவர்கள் மொழியை பெரும்பாலான ரோஹிங்கியாக்களால் படிக்கவோ எழுதவோ முடியாது. இதனாலேயே தங்கள் மொழியின் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒலி/ஒளி வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். நீண்ட நாளைய இந்த முயற்சி மிகத்தரமாக வெளிவந்திருக்கிறது. ஷேக் முஹம்மது அய்யூப் அவர்களின் குரலில் ஒலிக்கும் குர்ஆன் வசனங்களை ரோஹிங்ய அறிஞர்கள் ஒலி வடிவில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இவர்களின் முயற்சியை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. கூடிய விரைவில் இவர்கள் சந்திக்கும் துயரங்களை களைந்து இவர்களிடையே அமைதியை நிலைநாட்டுவானாக...

குர்ஆன் அத்தியாயம்வாரியாக ரோஹிங்கிய மொழிப்பெயர்ப்பை கேட்க: https://bit.ly/3u6fxkL

இந்த மொழிப்பெயர்ப்பு செயல்திட்டம் குறித்து முழுமையாக அறிய: https://bit.ly/3vJgG2f

படம் 1: ஷேக் முஹம்மது அய்யூப் அவர்கள்

References:

1. TRT World,  2. Life history of Sheikh Muhammad Ayyub. Islam21c

1 comment:

  1. எதையும் தீர்மானிப்பது நியூஸ் 1ஸ்ட் இல்லை எல்லாம் வல்ல அல்லாஹ்வே.

    ReplyDelete

Powered by Blogger.