அப்பாவி ஒருவரை கைது செய்யும்போது, ஏற்படும் பாதிப்புக்கு சுரக்மன் டீன் ஒரு உதாரணம்
- எம்.எப்.எம்.பஸீர் -
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அறியப்படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்து 15 நாட்கள் கடந்திருந்த காலப்பகுதி அது. 2019 மே 7 ஆம் திகதி. மொனராகலை மாவட்டம் – புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்வத்தை சீனி தொழிற்சாலையில் பாரிய சலசலப்பு. குறித்த நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக அப்போது செயற்பட்ட சுரக்மன் டீன், அந்த தொழிற்சாலையில் சேவையாற்றும் முஸ்லிம் ஊழியர்களை அழைத்து நடாத்திய கலந்துரையாடல்களே அந்த சலசலப்புக்கு காரணமானது.
குறித்த கலந்துரையாடலை பயங்கரவாத நடவடிக்கையாக சித்திரித்து தொழிற்சாலையில் இருந்த பல ஊழியர்கள் நிறுவனத்தை சுற்றிவளைக்கவே, நிலைமை எல்லை மீறிச் சென்றது. இதனால் புத்தள பொலிஸாரும், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும், இராணுவமும் பெல் வத்த சீனி நிறுவனத்தில் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் குறித்த நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி, குறித்த கலந்துரையாடல் ரமழான் மாத நடவடிக்கைகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க முன்னெடுக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் கோஷங்களைத் தொடர்ந்து வன்முறைகள் பதிவாகுவதை தடுக்க பிரதான செயற்பாட்டு அதிகாரி சுரக்மன் டீனும் ஏனைய முஸ்லிம் ஊழியர்களும் அங்கிருந்து பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாரிய சோதனை, தேடுதல் நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் ஆரம்பிக்கலாயினர். இந் நிலையில் பெல்வத்தை சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் இருந்து தேடுதலின்போது பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடைய சில உபகரணங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. 5 வோக்கி டோக்கிகள், பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவினரின் உடையை ஒத்த மூன்று சோடி உடை, பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் கையுறைகள், இரவு நேர நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் வகையை ஒத்த மின் விளக்கு உள்ளிட்டவையே அவ்வாறு கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், பெல்வத்தை சீனி நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக செயற்பட்ட சுரக்மன் டீனையும் மேலும் இருவரையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் புத்தள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந் நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், பிரதான செயற்பாட்டு அதிகாரி சுரக்மன் டீன், அவரது சாரதி, அந் நிறுவனத்தின் ஊழியர் ஆகிய மூவரும் 54 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நுகேகொடையைச் சேர்ந்த தற்போது 39 வயதாகும் சுரக்மன் டீன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவராகவும், மீட்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் உபகரணங்களை அவரே மறைத்து வைத்ததாகவும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது சாரதியான தற்போது 38 வயதாகும் உடகன கொலனி, புத்தளவைச் சேர்ந்த விக்ரமசிங்க முதியன்சலாகே சுதத் விக்ரம மற்றும் தற்போது 39 வயதாகும் படல்கும்புர பகுதியைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே சந்தன அஜித் எனும் தொழிற்சாலை ஊழியர் ஆகியோர் சுரக்மன் டீனுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், விசாரணையின் பின்னர் கடந்த 2019 ஜூலை 5 ஆம் திகதி, வெல்லவாய நீதிவான் மகேஷ் வாகிஷ்ட முன்னிலையில் குறித்த மூவரையும் புத்தள பொலிஸார் முன்னிலைப்படுத்தினர். இதன்போது தடுப்புக் காவல் விசாரணையின் போது அம்மூவரும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக எந்த விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர். அத்துடன் மீட்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் நீதிவானுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து அன்றைய தினம் வெல்லவாய நீதிவான், குறித்த மூன்று பேரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்திருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இந் நிலையில் கடந்த 2021 மார்ச் 24 ஆம் திகதி இது குறித்த வழக்கு மீள வெல்லவாய நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது இந்த வழக்கின் சந்தேக நபர்களை அவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர். அதாவது புத்தள பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் கோவைகள் சட்ட மா அதிபருக்கு மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டிருந்தது. அவற்றை ஆராய்ந்துள்ள சட்ட மா அதிபர், சந்தேக நபர்களுக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை எனவும் அவர்களை அவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆலோசனை, நீதிவானிடம் கையளிக்கப்பட்ட பின்னர் நீதிவான் அவர்கள் மூவரையும் விடுவித்தார்.
வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, சுரக்மன் டீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போது அவர் கூறியதாவது,
‘ 2019 ஆம் ஆண்டு எனக்கு சம்பவமொன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. பயங்கரவாத சட்டம் மற்றும் அவசர கால சட்டங்களின் கீழ் நான் அந்த சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. அது தொடர்பில் என்னை கைது செய்தார்கள். 54 நாட்கள் நான் புத்தள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன். அவ்விசாரணை நிறைவடையும் வரை நான் பொலிஸ் தடுப்பில் இருந்தேன். உண்மையில் அது எனக்கு பெரியதொரு அனுபவம். எனினும் எனக்கு அக்காலப்பகுதியிலேயே வாழ்க்கையின் மிகப் பெரும் துயர சம்பவத்துக்கும் முகம் கொடுக்க நேரிட்டது.
அது எனது தந்தையின் இழப்பு. நான் இந்த சம்பவத்துக்கு முகம் கொடுக்கும்போது, என்னை கைது செய்யும்போது, தந்தையும் தாயும் அதனை நேரில் பார்த்தார்கள். அவர்கள் அப்போது எனது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இருந்தனர். அந்த நொடி, ஒரே பிள்ளை என்ற ரீதியில் என்னை வெகுவாக பாதித்தது. நான் பெல்வத்தை சீனி நிறுவனத்துக்கு ஒரு கனவுடனேயே வந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை பூர்த்தி செய்யவே நான் பூரண எதிர்பார்ப்புடன் இங்கு வந்தேன். நான் இங்கு வந்து ஒரு மாதம் கூட ஆகும் முன்னர் இச்சம்பவத்துக்கு முகம்கொடுக்க நேரிட்டது. புத்தள மக்களுடன் இணைந்து நான் பாரிய வேலைத் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துச் சென்றேன். நான் முகம்கொடுத்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தால் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது.
உண்மையில் நான் அந்த ஒரு மாதமும் அதாவது ஏப்ரல் மாதம் ஒரு விடுமுறை கூட எடுக்காமல் நிறுவனத்தில் இருந்தவாறு அர்ப்பணிப்புடன் சேவை செய்தேன். குறிப்பாக சிங்கள – தமிழ் புத்தாண்டு நாளில் கூட நான் விடுமுறை எடுக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும்போது எனது தந்தை இருந்திருந்தால் அவர் மிகவும் சந்தோஷமடைந்திருப்பார். ( உணர்வு பூர்வமாக கண்ணீருடன் தொடர்ந்தார்). எனது தந்தையின் இழப்பு வாழ் நாளில் நான் சந்தித்த மிகப் பெரும் கவலையாகும்.
இந்த சம்பவத்தில் நான் கைது செய்யப்படும்போது எனது சிறிய மகனுக்கு ஒரு வருடமும் 2 மாதங்களும் மட்டுமே பூர்த்தியாகியிருந்தது. மனைவி தனியார் வங்கியொன்றில் சேவையாற்றும் நிலையில் அவரும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதனைவிட எனது மனைவியின் பெற்றோர் சகோதரி உள்ளிட்டோரும் பாரிய நெருக்கடிகளை சந்தித்தனர்.
உண்மையில் எனது மனைவியின் தந்தை இராணுவத்தின் ஒரு உயர் அதிகாரி. அவர் யுத்தத்தில் பாரிய சேவையாற்றிய ஒரு வீரர். இந்த சம்பவத்தால் அவருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. நான் முஸ்லிம் தான். எனினும் எனது பின்னணியை பாருங்கள். நான் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் கற்றேன். நான் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவன். அனைத்து மத, இனங்களைச் சேர்ந்த சகோதரர்களுடன் இணைந்து நான் சேவையாற்றியவன். பெளத்த அடிப்படையிலான நெருக்கமே கூடுதலாக இருந்தது. எனது நண்பர்கள் நூற்றுக்கு 99 வீதமானவர்கள் பெளத்தர்கள். பெளத்த மத அனுஷ்டானங்களுக்கு கெளரவமளிப்பவன் நான்.
நான் விகாரைகள், கோவில்கள், கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் சென்று வருபவன். அதனால் எனக்கு இன, மத ரீதியிலான வேறுபாடுகள் விளங்கவில்லை. உண்மையில் எப்போதும் நல்லவற்றையே செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். உண்மையில் அன்று நான் அந்த கலந்துரையாடலை நடத்தியதன் நோக்கம், இந்த பகுதியில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதற்காகும்.
ரமழான் மாதம் வரும் நிலையில், அம்மாதத்தில் நாம் அதிகமான நன்மையான விடயங்களை செய்வோம். அவ்வாறான நிலையிலேயே அம்மாதத்தில் நல்லவற்றைச் செய்வதற்காக அந்த கலந்துரையாடலை நான் நடத்தி இருந்தேன். எனினும் நாட்டில் இடம்பெற்றிருந்த துரதிஷ்டவசமான சம்பவம் காரணமாக எனக்கு இவ்வாறான நிலைக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. எவ்வாறாயினும் எனது மனசாட்சிக்கு தெரியும் நான் குற்றமற்றவன் என்று. அதனால் நான் இந்த நிலைமையை மிக தைரியத்துடன் எதிர்கொண்டேன்.
உண்மையில் நான் எந்த பயங்கரவாத நடவடிக்கையுடனும் தொடர்புபடவில்லை என நீதிமன்றின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். இந் நாட்டுக்காக எதிர்காலத்திலும் என்னால் இயலுமான முழுமையான பங்களிப்பினை நான் வழங்குவேன். இந் நாட்டை பாதுகாப்பாக முன்னேற்றிச் செல்ல எனது பங்களிப்பை கண்டிப்பாக வழங்குவேன். புத்தள மக்கள் எனக்கு தந்த ஆதரவையும் நான் நன்றியோடு நினைவு கூறுகிறேன். என்னை பொலிஸ் நிலையத்தில் வந்து பலரும் பார்வையிட்டார்கள். உணவு கொண்டுவந்து கொடுத்தார்கள். உண்மையில் நான் அவற்றை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.’ என தெரிவித்தார்.- Vidivelli
Post a Comment