ஒரேநாளில் உலகளவில் எந்த ஒரு நாட்டிலும், இத்தனை அதிகமாக கொரோனா வைரஸ் பரவியது இல்லை
கடந்த பல மணி நேரங்களாக உடல் நலமின்றி காத்துக் கிடக்கும் தங்களின் சொந்த பந்தங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
இறந்தவர்களை எரியூட்டும் தகன மையங்களோ பல்வேறு சடலங்களைச் சேர்த்து எரியூட்டிக் கொண்டிருக்கின்றன.
நேற்று (ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில், இந்தியாவில் 3.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,263 பேர் முந்தைய 24 மணி நேரத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை, ஒரே நாளில் உலக அளவில் எந்த ஒரு நாட்டிலும் இத்தனை அதிகமாக கொரோனா வைரஸ் பரவியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது,. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடமில்லை என டெல்லியில் இருக்கும் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர் அதுல் கோகியா கூறினார்.
"எங்களிடம் அத்தனை அதிக ஆக்சிஜன் முனைகள் இல்லை. எத்தனை ஆக்சிஜன் முனைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தாங்களாகவே வாங்கிக் கொண்டு வருகிறார்கள், சிலர் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலும் வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். ஆனால் போதுமான படுக்கைகள் இல்லை போதுமான ஆக்சிஜன் முனைகள் இல்லை" என்கிறார் மருத்துவர் அதுல்.
"எங்களின் அனைத்து தொலைபேசி எண்களும் அழைப்புகளால் திணறுகின்றன. மக்கள் தொடர்ந்து எங்கள் தொலைபேசி எண்களுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வெளியே அத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்கள். வெளியே ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன, நோயாளிகள்ள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க இடமில்லை" என்கிறார் அதுல்.
"உடல் நலம் தேறிய நோயாளிகளை எத்தனை விரைவாக வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அத்தனை விரைவாக டிஸ்சார்ஜ் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் தற்போதைய நிலை வேறு விதமாக இருக்கிறது" என்கிறார் அம்மருத்துவர்.
இந்திய மாநிலங்களிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. அம்மாநில தலைநகரான மும்பையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 13 நோயாளிகள் இறந்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவினால், நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் மூலம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த ஆக்சிஜனில் தடை ஏற்பட்டு 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் 10 தனியார் மருத்துவமனைகளை நடத்தும் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனைக் குழுமம், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தங்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் விநியோகிக்க வேண்டுமென ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தது. தங்களின் இரண்டு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பிறகு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களும் இதே போன்ற நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகிக்க இந்திய விமானப்படை களத்தில் இறங்கியுள்ளது
Post a Comment