Header Ads



உலகை உலுக்கிய புகைப்படம் - அம்பலமான அமெரிக்காவின் அகோர முகம்


- Aashiq Ahamed -

முதலில் படத்தை பாருங்கள். உலகை நிலைக்குலைய செய்த படங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. சேனல் 4 ஊடகம், இச்சம்பவம் தொடர்பான இரகசியங்களை வெளிக்கொண்டு வந்த தருணத்தில், அதனை எதிர்க்குரல் தளத்தில் விரிவாக பதிவு செய்த போது, படித்தவர்களில் பலர் அதிர்ச்சியில் உறைந்ததாக சொன்னார்கள். இன்னும் சிலரோ கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்கள்.

சாதிய கொடுமைகளை ஆவணப்படுத்துவது போல, அறிவியல் போர்வையில் நடந்த கொடூர இனவெறி சம்பவங்களை ஆவணப்படுத்துவதும், அதனை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் அவசியம் என்ற வகையில் இங்கே சுருக்கமாக இச்சம்பவம் நினைவுப்படுத்தப்படுகிறது.

1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன. 

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். 

அதெல்லாம் சரி.. விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....மனிதர்களை காட்சிக்கு வைத்தால்?????

அமெரிக்க மானிடவியல் சங்கத்தின் தலைவராக இருந்த ஜான் மெக்கீ, வெள்ளையர்களே மனிதர்களில் உயர்ந்தவர்கள் என்ற டார்வினின் பரிணாம கருத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினார். பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அழைத்து வந்து அவர்களை காட்சிக்கு வைத்து வெள்ளையர்களே சிறந்தவர்கள் என நிரூபிக்கும் விபரீத முயற்சி தான் அது. 

மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy). இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர். ஜான் மெக்கீயால் அனுப்பப்பட்ட ஆட்கள் பிக்மீகளை அமெரிக்காவிற்கு அழைத்து வந்தார்கள்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்கா என்ற பெயருடைய பிக்மீ மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா. ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

கொடுமை இதோடு நிற்கவில்லை. மற்ற பிக்மீக்கள் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டு விட, ஓடா பெங்காவோ நியூயார்க் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த zoo-வின் நிர்வாகிகள், டார்வினின், குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான் என்ற கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட முடிவு செய்தார்கள். மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது. அதாவது, குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் தான் பெங்கா என்றது.

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற்படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதனால் மிகுந்த மன உளைச்சளுக்கு உள்ளான பெங்கா, "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம். ஒரு கட்டத்தில் தன் வாழ்வை தற்கொலை மூலம் முடித்துக்கொண்டார் பெங்கா. டார்வினின் இனவெறி கோட்பாடு மற்றுமொரு உயிரை குடித்துவிட்டது. இன்றும், டார்வினின் படத்தை தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொண்டு வெள்ளையின வெறியர்கள் வலம் வருவது எதேச்சையானது அல்ல, அதன் பின்னால் சொல்லப்படாத பல உண்மைகள் உண்டு.

இச்சம்பவம் குறித்து விரிவாக நான் எழுதிய கட்டுரையை படிக்க: https://bit.ly/2RpIHgi

நன்றி:

Channel 4 மற்றும் Mail online.

No comments

Powered by Blogger.