ஜாகீர் என்று நினைத்து, ஆறுமுகத்தின் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் - கொரோனா அதிர்ச்சி சம்பவம்
- நடராஜன் சுந்தர் -
கடலூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த இரு வேறு மதத்தினரின் சடலங்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஊழியர்கள் மாற்றி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த சடலங்களில் ஒருவரது சடலம் குறிப்பிட்ட மத வழக்கத்தின்படி அடக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், மற்றொருவருடைய சடலம் தங்களுடைய உறவினர் இல்லை என குடும்பத்தினர் கண்டுபிடித்த பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் (வயது 59) என்பவருக்கு கொரானோ நோய்த்தொற்று காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக காணப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரானோ பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) அவரது உயிர் பிரிந்தது.
இதே போல, கடலூர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 51) என்பவர் உடல்நிலை குன்றி கொரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரும் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் சரியாகத்தெரியவில்லை.
முன்னதாக, ஆறுமுகத்திடம் நடத்தப்பட்ட கொரோனா இரண்டாவது பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என அறிக்கை தரப்பட்டது.
இந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையிலிருந்து ஜாகீர் மற்றும் ஆறுமுகம் இருவரின் உடலை அவரவர் குடும்பத்தினரும் புதன்கிழமை காலையில் பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து இருவரின் குடும்பத்தினரும் இறுதி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனர். இதில், புவனகிரியை சேர்ந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஜாகீர் குடும்பத்தினர் அவரது உடலை அடக்கம் செய்தனர்.
இதேவேளை, பண்ருட்டியைச் சேர்ந்த கொரோனா நெகட்டிவ் என கூறப்பட்ட ஆறுமுகத்தின் உடலை உறவினர்கள் அடையாளம் கண்ட போது, அது ஆறுமுகம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மாற்றி எடுத்துச்சென்ற உடலை மருத்துவமனையில் ஒப்படைத்தபோது அது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜாகீர் உடல் என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் ஜாகீர் குடும்பத்தினருக்கு உடல் மாற்றி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் தெரிவித்த போது, அவர்கள் தவறுதலாகக் கொண்டு வந்த உடலைப் அடக்கம் செய்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் உயிர்களைப் பறிகொடுத்த இரு தரப்பு குடும்பத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, "கடந்த வாரம் ஜாகீர், ஆறுமுகம் ஆகிய இருவரும் கொரோனா தொற்று காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதில் கொரோனா பாதிப்பு டன் வந்த ஆறுமுகத்திற்கு இரண்டாவது முறையாகச் செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இருவருமே நேற்றிரவு உயிரிழந்தனர். இதையடுத்து இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறுமுகம் உடலை அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மற்றொரு உடலை ஜாகீர் உடல் தான் என்று நினைத்து அவரது குடும்பத்தினர் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்," என்றார்.
"இந்த சூழலில், ஆறுமுகம் குடும்பத்தினர் உடலைத் தவறாக கொண்டு வந்ததாக தெரிவித்ததையடுத்து, இருவரின் குடும்பத்தினரையும் அழைத்துப் பேசினோம். இரு தரப்பினரும் உடலை மாற்றிக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருகிறோம்," என ரமேஷ் தெரிவித்தார்.
முன்னதாக ஜாகீர் என்று நினைத்து ஆறுமுகத்தின் உடலை இஸ்லாமிய முறைப்படி ஜாகீர் குடும்பத்தினர் அடக்கம் செய்து விட்டனர். இந்த நிலையில், மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட ஜாகீர் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று அடக்கம் செய்தனர்.
இதற்கிடையே, ஜாகீர் குடும்பத்தாரால் முதலில் புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடல், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக அடக்கம் செய்யப்பட்ட ஆறுமுகம் உடலை தோண்ட முற்பட்டபோது, அவர் கொரோனா தொற்று பாதித்த நபர் என்று கூறி, அப்பகுதி மக்கள் உடலை தோண்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அந்த சடலம் ஆறுமுகம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment