Header Ads



ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி


புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும்.

கடந்த வருடம் புத்தாண்டு பிறப்பின் போது நாட்டில் நிலவிய சீரற்ற சுகாதார நிலைமைகள் அதற்குத் தடையாக இருந்தபோதிலும், பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டின் பின்னணியை நாம் அனைவரும் சேர்ந்து அமைத்திருக்கின்றோம். அது புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதை காட்டுகிறது.

சிங்கள, தமிழ் புத்தாண்டு எங்களது மிகப்பெரும் கலாசார விழாவாகும். நாட்டு மக்கள் ஒரே சுபநேரத்தில் புத்தாண்டு கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சம் மலரும் என்று எங்கள் உள்ளங்களில் ஒரு வலுவான நம்பிக்கை ஆழப் பதிந்துள்ளது. 

சிறுவர்களை மகிழ்விக்கும் புத்தாண்டு ஆடைகள், உணவுகள் மற்றும் விளையாட்டுகளை பார்த்து பெரியவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைகின்றனர். மேலும், சூழலில் ஏற்படும் இனிமையான மாற்றங்கள் எமக்கு உடல் மற்றும் உள ஆறுதலைத் தருகின்றன.

சிக்கலான எண்ணங்களுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடும் வளர்ந்தவர்கள் அவர்களுக்கிடையே ஏற்படும் கவலைதரும் மனக்குறைகளை தேற்றிக்கொள்ள கிடைப்பதும் புத்தாண்டின் ஒரு விசேட சிறப்பம்சமாகும்.

அனைத்து மக்களும் எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் சிங்கள, தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

புத்தாண்டு காலத்தில் தங்களது பிள்ளைகளை பிரிந்து கடமைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரினதும் அர்ப்பணிப்புகளை நான் இச்சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுகூர்கிறேன்.

மலரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்!

 கோட்டாபய ராஜபக்ஷ

2021 ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி

No comments

Powered by Blogger.