விலகிச்சென்ற மகனை பெற்றோரிடம், கொண்டுவந்து சேர்த்த இஸ்லாம்
- Aashiq Ahamed -
பிரித்தானிய இஸ்லாமிய ஆய்வுக்கழகமான IERA, ஒரு நெகிழ்வான நிகழ்வை பகிர்ந்துள்ளது. விலகிச்சென்ற மகனை பெற்றோரிடம் இஸ்லாம் கொண்டு வந்து சேர்த்த சம்பவம் தான் அது.
ஜப்பானை சேர்ந்தவர் யூஷா கொய்னுமா, பாடகர். தன்னுடைய பணிக்காக இருபத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ள யூஷா, மொராக்கோவிற்கு பயணமான போது அவர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுகிறது.
"டாக்சியில் சென்றுக்கொண்டிருந்தேன். வானொலியில் மிக அழகான பாட்டு ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. இசைக்கருவிகள் இல்லை, ஆனாலும் மிக இரம்மியமாக இருந்தது. பாடல் வரிகள் மற்றும் இசையில் அனுபவமிக்கவன் நான். ஐரோப்பாவின் பல்வேறு இசைகளையும் அறிந்திருக்கின்றேன்.
ஆனால் இங்கே இந்த வானொலியில் கேட்கும் இது வித்தியாசமாக இருந்தது. மிக அழகான கவிதையாக தோன்றியது. டாக்சி ஓட்டுனரிடம் இது என்னவென்று கேட்டேன். குர்ஆன் என்று பதிலளித்தார் அவர். ஓ இதுதான் குர்ஆனா, இவ்வளவு அழகான ஒலியமைப்பா, எனக்கு குர்ஆன் அறிமுகமான தருணம் இது தான்.
மொராக்கோவில் நான் தங்கியிருந்த ஹாஸ்டலில் சந்தித்த ஒரு சகோதரர் உற்ற நண்பரானார். அவரிடம் இஸ்லாம் குறித்து கேட்க ஆரம்பித்தேன். கொஞ்ச கொஞ்சமாக இஸ்லாம் எனக்குள் வரத்தொடங்கியது. அர்த்தங்களுடன் குர்ஆனை கேட்ட போது இன்னும் பிரம்மிப்பாக இருந்தது. குர்ஆனின் உள்ளடக்கம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டதாக உணர்ந்தேன்.
இஸ்லாம் கூறும் சிறு விஷயங்கள் கூட எனக்கு ஆச்சர்யத்தை தந்தன. உதாரணத்திற்கு முஸ்லிம்கள் கூறும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமனை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு, உங்கள் மீது அமைதி உண்டாவதாக என்று பொருள். ஜப்பானில் இப்படியான கலாச்சாரம் இல்லை. கொன்னிச்சிவா என்போம், ஹாய் என்போம், ஹலோ என்போம். ஆனால் முகமனில் கூட அடுத்தவர் அமைதிக்காக பிரார்த்திக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது.
மொராக்கோவில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். பின்னர் மூன்று மாதங்கள் தென்னாப்பிரிக்காவில் அரபி கற்றுக்கொண்டேன், இஸ்லாம் குறித்தும் மேலதிகமாக அறிந்துக்கொண்டேன்"
ஜப்பான் திரும்ப முடிவெடுத்த சகோதரர் யூஷாவிற்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு காத்திருந்தது. இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால், பல்வேறு காரணங்களுக்காக, பெற்றோருடனான உறவு பதற்றமான சூழலை எட்டியிருந்தது. ஆனால் இஸ்லாம் பெற்றோரிடம் நெருங்கி செல்வதை வலியுறுத்துகிறது. இஸ்லாம் கூறும் முக்கிய பண்பை நிராகரித்துவிட்டு தன்னை முஸ்லிம் என எப்படி கூறுவது?
ஜப்பான் திரும்பிய யூஷா கொய்னுமா, பெற்றோருடன் நெருங்க தொடங்கினார். யூஷாவிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய பெற்றோருக்கு ஆச்சர்யத்தை தந்தன. தன் மகனிடம் மிகப்பெரும் பாசிட்டிவ் மாற்றத்தை இஸ்லாம் ஏற்படுத்தியதை கண்கூடாக பார்த்த யூஷாவின் அம்மா இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். யூஷாவின் தந்தையோ, "ஆம், முஸ்லிமானதில் இருந்து என் மகனிடம் பெரிய மாற்றம் தெரிகிறது" என்று கூறுபவர், இஸ்லாம் குறித்து மேலும் படித்து வருவதாக கூறுகிறார்.
படம்: தன் பெற்றோருடன் யூஷா கொய்னுமா. இடது ஓரம் இருப்பவர் சிபா இஸ்லாமிய கலாச்சார மைய சேர்மனான சல்மான் க்யோசிரோ சுகிமொடோ.
IERA பதிவை காண: https://youtube.com/c/iERAOrg
யூஷா கொய்னுமாவின் நேர்காணலை காண: https://youtu.be/R_vg8ktWnpU
Ya ALLAH ! acknowledge all of them and grant them resounding success here & hereafter. Aameen!
ReplyDelete