பொலிசாரின் துன்புறுத்தல்களைத் தடுக்க, போதிய நடவடிக்கை இல்லை: சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை
(News 1st)
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, குற்றவியல் வழக்கு தண்டனை சட்டக்கோவையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கடந்த மாதம் விடுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான்கள் மாதத்திற்கு ஒரு தடவை, பொலிஸ் பொறுப்பிலுள்ள சந்தேகநபர்களை சந்தித்து அவர்களின் நிலை குறித்து ஆராய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக மாத்திரம் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் அடங்குமுறையைத் தடுக்க முடியாது என சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தொடர்ச்சியான தலையீடு அவசியம் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட புற்றுநோய்க் காரணி அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு எண்ணெய் பவுசர்கள் தொடர்பிலான பொலிஸாரின் செயற்பாடு குறித்து மாரவில நீதிமன்றத்தில் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்த அதன் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு உத்தரவிடப்பட்டிருந்த போது, அந்த இரண்டு பவுசர்களும் கொழும்பு துறைமுகத்தின் சுங்கப் பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பில் உடனடியான ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு மாரவில நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
Post a Comment