ஈஸ்டர் தாக்குதல் அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான அமைச்சரவை உபகுழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள், இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அறிக்கையை கையளித்தார்.
2021 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் இக்குழு நியமிக்கப்பட்டது.
குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படவிருந்தபோதிலும் மேலதிக ஆய்வுகளுக்காக குழு மேலும் இரண்டு வாரகாலம் அவகாசம் பெற்றுக்கொண்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை விரிவாக ஆராய்ந்த குழு, 78 பரிந்துரைகளை கண்டறிந்துள்ளது. அப்பரிந்துரைகளை எந்த நிறுவனத்தினால் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான பரிந்துரைகள் ஜனாதிபதி அவர்களினால் இதற்கு முன்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் குழுவின் செயலாளர் ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (சட்டம்) ஹரிகுப்த ரோஹனதீர ஆகியோரும் அறிக்கையை சமர்ப்பிக்கும் இவ்வேளையில் பிரசன்னமாகியிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.04.05
Post a Comment