இஸ்லாத்தை ஏற்று, சகாத்தினால் பயன்பெற்ற, ஒரு சகோதரியின் உருக்கமான பதிவு
- Aashiq Ahamed -
நாம் எளிதாக கடந்துவிடும் விஷயங்கள் அடுத்தவருக்கு எப்படியான உத்வேகத்தை அளிக்கிறது என்பதை விளக்கும் விதமாக அமைந்திருந்தது, இங்கிலாந்தின் பிரபல இதழ்களில் ஒன்றான Metro-வில் சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்று. பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரி ஒருவரின் இஸ்லாமிய பயணத்தை தாங்கி வந்திருந்த இந்த கட்டுரை கவனத்தை வெகுவாகவே ஈர்த்தது. சகோதரியின் வார்த்தைகளில் இருந்து,
"இஸ்லாம் குறித்து படித்துக்கொண்டிருந்த தருணத்தில் என்னை வெகுவாக கவர்ந்த விஷயங்களில் ஒன்று ஜகாத். இங்கே நிறைய தொழில் நிறுவனங்களும், அதிகமாக பொருள் ஈட்டுபவர்களும் தங்கள் வரியை குறைக்க நினைக்கின்றனர் அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர். ஆனால் நான் அறிந்த முஸ்லிம்கள் ஜகாத்தை தானாக முன்வந்து கொடுத்தனர். இவர்களை யாரும் நிர்பந்திக்கவில்லை. இயற்கையாகவே இஸ்லாம் இவர்களை இப்படி பழக்கியிருக்கிறது. ஜகாத் என்பது தங்களுக்கான செல்வம் அல்ல, அது தர்மமும் அல்ல, மாறாக அது தேவையுடைவர்களின் உரிமை என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றனர்.
பள்ளிவாசலுக்கு அருகில் தான் என்னுடைய வீடு அமைந்திருந்தது. அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு இன மக்கள் வருவார்கள். ஆனால் அவர்களிடம் வேறுபாடு இருந்ததில்லை., அவர்களுக்கு இடையேயான வலுவான சமூக கட்டமைப்பு என்னை கவனிக்க வைத்தது. விவாகரத்து பெற்றவள் நான். 2020-ல் என்னுடைய முதல் குழந்தை பிறந்த பிறகு இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன்.
அதன் பிறகு எல்லாமே மாறிவிட்டது. என்னை சார்ந்த எல்லோருமே விலகிவிட்டார்கள். என் நெருங்கிய உறவினர்கள் உடனான உரையாடல்கள் சில sms-களில் வந்து நிற்கிறது. அலுவலக நண்பர்களின் அணுகுமுறையால் வேலையும் பறிபோனது. பொருளாதார சூழலோ மிகவும் மோசமடைந்து விட்டது.
நான் இஸ்லாமில் விரும்பிய பல விஷயங்களில் ஒன்று அதன் சமூக கட்டமைப்பு, இறைநம்பிக்கை எனும் ஒரு புள்ளியில் இணைவது. இன்று நான் தனித்து விடப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் விரும்பிய அந்த இஸ்லாமிய கட்டமைப்பு எனக்கு உறுதுணையாக நிற்கிறது. புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், புதிய உறவினர்கள் கிடைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என்னைப்போன்ற புதிய முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்களை நன்குணர்ந்து எனக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இந்த ஆதரவு உணர்வுரீதியானது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த என்னை இன்று ஜகாத் காப்பாற்றியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தில் எனக்கிருக்கும் உரிமையை இஸ்லாமிய சமூகம் நிறைவேற்றி இருக்கிறது. ஆம், அன்று எந்த ஜகாத்தால் கவரப்பட்டு இஸ்லாமிற்குள் வந்தேனோ இன்று அது தான் என்னை காப்பாற்றியிருக்கிறது. ஜகாத் மூலம் என்னுடைய கடன்களை அடைத்திருக்கிறேன், இழந்து போன பொருளாதாரம் முன்னேற்றமடைந்திருக்கிறது. இன்று புதிய வேலையும் கிடைத்துவிட்டது.
எவ்வளவோ சோதனைகளை சந்தித்துவிட்டேன். ஆனால் இஸ்லாமை தேர்ந்தெடுத்தது தான் என் வாழ்வில் நான் எடுத்த சிறந்த முடிவாகும். காரணம், வாழ்க்கைக்கான நோக்கத்தையும், நான் பெரிதும் விரும்பிய சமூக கட்டமைப்பையும் கொடுத்தது இஸ்லாம் தான்"
செய்திக்கான ஆதாரம்: https://bit.ly/3enUHXm
படம்: மெட்ரோ இதழ்.
Post a Comment