சிங்கள மக்களை உசுப்பேற்ற வேண்டாம் - ரத்தின தேரர் மீது ஹக்கீம் பாய்ச்சல் (வீடியோ)
அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது,
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்மொழிந்துள்ள பிரேரணை மீது எனக்கும் உரையாற்ற கிடைத்துள்ளது. அவரது பிரேரணை மீது இரு தரப்பு உறுப்பினர்களும் தெரிவித்த கருத்துக்களை செவிமடுத்த பின்னர், சில விடயங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகப் பிரச்சினையைப் பொறுத்தவரை, கடந்த அரசாங்கத்தில் நானும் சில காலம் உயர் கல்வி அமைச்சராக இருந்த போது, இதுபற்றி நன்றாக ஆராய்ந்து பார்த்துள்ளேன். அது சம்பந்தமான உப குழுவிலும் நான் அங்கத்துவம் வகித்துள்ளேன். இதற்கான பணத்தை கையாள்வதில் ஹிஸ்புல்லாஹ் சில தவறுகளை இழைத்திருக்கக் கூடும். ஆனால், அவரது நோக்கம் எதுவாக இருந்தபோதிலும், இந்தப் பணம் கிடைத்துள்ள விதம் தொடர்பிலும், பணச் சுத்திகரிப்பு தொடர்பிலும் அதற்கு பொறுப்பான நிறுவனம் உரிய முறையில் அதனை கண்டறிந்திருக்க வேண்டும். அது வேறு விடயம்.
இந்த பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதை பார்த்தால், சவூதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியொருவரினூடாக நல்ல விடயத்திற்காக பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டதாகச் கூறப்படுகின்ற பெருந்தொகை பணம், ஹிஸ்புல்லாஹ்வின் தனிப்பட்ட தேவைகளுக்கு உபயோகிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த பல்கலைக்கழகத்தை ~ரீஆ பல்கலைக்கழகம் என குறிப்பிடுவதையிட்டு நான் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரரும் இதுபற்றி கடுமையாக கதைத்தார். அன்னார் தலதா மாளிகையின் சமீபமாக உண்ணாவிரதம் இருந்த போது, பாரிய கலவரம் ஏற்படக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது. அதனை தவிர்ப்பதற்காக நாங்கள் எல்லோருமாக எமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். எங்களது அரசாங்கமும் அதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காததால் நாங்கள் அந்த முடிவுக்கு வர நேர்ந்தது.
எதை வேண்டுமானாலும், தங்களுக்கு சார்பானதாக மாற்றிக் கொள்ளக் கூடிய எதிர்கட்சியொன்று அப்போது இருந்தது. இப்பொழுது அவர்கள் ஆளும் தரப்பில் இருக்கின்றனர்.
இப்பொழுது ~ரீஆ பல்கலைக்கழகம் என்ற இந்த காரணத்தை எடுத்துக் கொண்டால், அது அறவே அடிப்படையற்றது. அந்த பல்கலைக்கழகம் பல்வேறு கற்கை நெறிகளுக்காகவே அமைக்கப்பட்டது. ~ரீஆ சட்டத்தைப் போதிப்பது அதில் ஓர் பிரிவு மட்டுமே. அது ஒரு கலாசாரம் சார்ந்த பிரிவு மட்டும் தான். அது நீதி பீடம் அல்ல.
(அத்துரலியே ரத்தன தேரர் குறுக்கீடு செய்து ஒழுங்குப் பிரச்சினையை கிளப்புகின்றார்.) :- எனது பெயரைக் குறிப்பிடுகிறார், அதனால், நான் அது பற்றிக் கூற இடமளியுங்கள். தனியார் பல்கலைக்கழகத்தை பதிவு செய்யும் பிரிவிற்கு கொடுத்த கடிதத்தில் ஆரம்பத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அது ~ரீஆ பல்கலைக்கழகம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
அவ்வாறு ~ரீஆ பல்கலைக்கழகம் என குறிப்பிடப்பட்டிருக்கவே இல்லை. இது மலட்டு தன்மையை ஏற்படுத்தும் மருந்து, மலடாக்கும் மருத்துவர், மலட்டு உள்ளாடை என்பன போன்ற ஒன்று தான் இந்த ~ரீஆ பல்கலைக்கழகம் என்ற கட்டுக்கதையாகும். இவ்வாறு எல்லாம் கூறி அப்பாவி கிராமப்புற சிங்கள மக்களை உசுப்பேற்ற வேண்டாம் சங்கைக்குரிய ரத்தன தேரரே. இவ்வாறு தான் நீங்கள் தொடர்ந்தும் நடந்து கொள்கின்றீர்கள்.
இவ்வாறு கூறுவதனால்தான், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முழு முஸ்லிம் சமூகமுமே பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இதில் உங்களுக்கும் ஒரு பெரும் பங்குண்டு.
உங்களைப் போன்றோரது அரசியல் அபிலாi~களை அடைந்துகொள்வதற்காகவே இவ்வாறான கருத்தியலை உருவாக்குகின்றீர்கள். இதனால் அப்பாவி முஸ்லிம்களை நீங்கள் மேலும் பாதிப்புக்குள்ளாக்குகின்றீர்கள்.
பிரஸ்தாப பல்கலைக்கழகம் சம்பந்தமான பாராளுமன்ற உபகுழுவில் நானும் உறுப்பினராக இருந்தபடியால் அதன் அறிக்கையில் சேர்த்துக் கொள்வதற்காக இ;ந்த பல்கலைக்கழகம் பற்றியும், ஹிஸ்புல்லாஹ் பற்றியும் என்னால் தனியாக தயாரித்தளிக்கப்பட்ட அதற்கான இணைப்பை எனது பேச்சின் ஓர் அங்கமாக ஹன்சாட்டில் பதிவு செய்வதற்காக இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஆணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் வெறுமனே தவ்ஹீத் என்ற பெயரில் இயங்கிய அனைத்து அமைப்புக்களுமே தடை செய்யப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்தித்து விளக்கியிருக்கின்றார்கள். அவருக்கும் இதில் தெளிவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
தேவையில்லாத விதத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாஆத் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதியா, அகில இலங்கை தௌஹீத் ஜமாஆத், ராபியத்துல் அஹ்லத்துல் சுன்னாஹ், ஐக்கிய தவ்ஹீத் ஜமாஆத் போன்ற அமைப்புக்கள் வெளியிட்டியுள்ள அறிக்கையை இங்கு சமர்பிக்கின்றேன். இது பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்கேயோ உள்ளவர்களின் கதைகளைக் கேட்டு வேண்டுமென்றே அதற்கான அத்தாட்சிகள் எவையுமின்றி, இவ்வாறு அவை தடை செய்யப்பட்டுள்ளன.
நியாயம் நிலைநாட்டப்படுவது இல்லை. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு பின்னர் நீதி நியாயத்தை நிலைநாட்டும் செயற்பாட்டை பொறுத்தவரை நிலைமை மிகவுமே மோசமாகியுள்ளது. இவ்வாறான வேட்டையாடல் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
Post a Comment