Header Ads



முஸ்லிம் சமூகத்தின், முக்கிய கவனத்திற்கு..!


இன்னும் சில தினங்களில் தமிழ், சிங்கள சகோதர சமூகங்களின் புத்தாண்டு வருகிறது.

எனவே இந்நாட்களில் முஸ்லிம்கள் தங்கள் அன்றாட வெளி அலுவல்களை மிகுந்த நிதானத்துடன் செய்துகொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்போம். 

அங்காடிகள், சலூன்கள், உல்லாசத் தலங்கள், பொழுதுபோக்கு நிலையங்களுக்கு நாம் போவதை முடியுமான வரை குறைத்துக் கொள்வோம். இத்தகைய இடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம். 

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் முன்னரை விடவும் மிகுந்த எச்சரிக்கையோடும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நடந்துகொள்வோம். குறிப்பாகக் கொள்ளை லாபம், மோசடி, கலப்படம் ஆகியவற்றிலிருந்து முழுமையாகத் தவிர்ந்து கொள்வோம். 

முறுகல் நிலைவரம் காணப்படும் இடங்களில் தொழில் செய்வோர் இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு நடந்துகொள்வோம். 

அரச, தனியார் துறைகளில் பணிபுரிவோர் இந்நாட்களில் விடுப்பு - லீவு எடுக்காமல் கடமைகளுக்குச் சென்று மாற்றுச் சமூகங்களைச் சார்ந்தோர் விடுப்பில் செல்லக்கூடிய விதமாக அனுசரித்து நடந்துகொள்வோம். 

முஸ்லிம் சமூகத்துக்கும் இன்னும் சில தினங்களில் நோன்பு காலம் ஆரம்பமாக உள்ளது. முன்னெப்போதை விடவும் இம்முறை நோன்பு காலத்தைப் பேணுதலாகக் கழிப்போம். பள்ளிவாசல்களில் தேவைக்கு அதிகமாக ஒலிபெருக்கிகளின் சத்தம் வராமல் பார்த்துக் கொள்வோம். இரவு நேரங்களில் வீதிகளில், பொது இடங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து அரட்டை அடிப்பது, விளையாடுவது போன்ற விடயங்களை முற்றிலும் தவிர்த்துக் கொள்வோம். 

வீடுகளில் சமைக்கப்படும் விஷேட உணவுப் பண்டங்களை அயலில் வாழும் மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்வோம். நோன்பு திறக்கும் நிகழ்வுகளை நமது இல்லங்களில் நடத்தும்போது நமது மாற்றுமதச் சகோதரர்களுக்கும் அழைப்பு விடுத்து உபசரிப்போம். 

நமது அன்றாட வாழ்வில் அளவுக்கதிகமான சாப்பாட்டுச் செலவுகளைக் குறைத்து, சிக்கனப் படுத்தி அயலில் உள்ளோருக்கு தான, தர்மங்கள் செய்வதைக் கூட்டிக் கொள்வோம். 

மொத்தத்தில் எவருக்கும் இடைஞ்சல் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்கி, சட்டம், ஒழுங்கைப் பேணி நடந்து நமக்கும் பிற சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக, அனுசரித்துப் போகக்கூடியவர்களாக நடந்துகொள்வோம் ! 

Ajaaz Mohamed

1 comment:

  1. சிறந்த நடைமுறைச் சிந்தனை.

    ReplyDelete

Powered by Blogger.