கொரோனா புதிய அலை - இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அபாயம்
- Health Promotion Bureau -
கோவிட் 19 வைரஸின் பல புதிய விகார வகைகள் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்தில், பல நாடுகளில் இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும் கடந்த சில தினங்களாக அவதானிக்கப் பட்ட நிலையும் இதற்குச் சமமானதாகும்.
இதற்கும் மேலதிகமாக, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணிசமான நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதும் காணக் கிடைக்கின்றது.
இந்த பின்னணியில், முன்னெப்போதையும் விட, தடுப்பு நடவடிக்கைகளை மிகத் துல்லியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் தோன்றி உள்ளது.
இளையோர், முதியோர் உட்பட சிறு குழந்தைகளைக் கூட இந்நோய் தொற்றக்கூடிய சூழல் உள்ளதால் முடிந்தவரை அவசர நிலைகளைத் தவிர வீட்டிலிருந்து வெளியேறுவது மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
இப்போது காணப்படும் புதிய விகாரமான வைரசானது முன்பு இனங் காணப்பட்ட விகாரங்களிலிருந்தும் வேறுபடுவதால் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்ற கருத்தும் உள்ளது. எனவே, நெரிசலான இடங்களில் தேவையின்றி தரித்திருப்பது தம்மை மட்டுமல்ல, தமது குடும்பத்திலுள்ள இளையோர் மற்றும் முதியவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளுவது போலாகின்றது.
வீட்டை விட்டு வெளியேறும் போது எப்போதும் முகக்கவசம் அணிவது போலவே கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
முடிந்தவரை நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அவசியமான சந்தர்ப்பங்களில் நீங்கள் நெரிசலான இடத்திற்குச் செல்ல வேண்டுமானால் விரைவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நோய்த்தொற்று அபாயத்தை ஓரளவிற்குக் குறைக்கும்.
வெளிநாடுகளிலிருந்து நாம் காணும், கேட்கும் செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலமாக குறுகிய காலத்தில் இத் தொற்று நோய் மிகக் கடுமையாக அதிகரிக்கின்றது என்பது தெளிவாகின்றது.
எதிர்வரும் கால கட்டத்தில் நமது நடத்தையின் தன்மை, நம் நாடும் அதே திசையில் இழுத்துச் செல்லப்படப் போகிறதா அல்லது அதிலிருந்து விலகி மகச்சிறந்த நாளை நோக்கி நகர்கிறதா என்பதை தீர்மானிக்கும்.
Post a Comment