கொரோனா தடுப்பூசிக்கு பதில், வாய்வழி மருந்து - நம்பிக்கையூட்டும் புதிய தகவல்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ்
இதைப்போல தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி உயிர்ப்பலியை குறைக்கிறது என்பதால் உலகம் முழுவதும் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கொரோனாவில் இருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று இருந்த நிலையில் தற்போது ஒரு மாற்றாக வாய்வழி மருந்து கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையூட்டும் தகவல்கள் வந்துள்ளன.
பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் நிறுவனம்தான் அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் சரியாக நடந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாய் வழியாக உட்கொள்ளும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் இந்த மருந்தை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘‘ரெம்டெசிவிர்’’ என்கிற மருந்தும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment