Header Ads



கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர்


நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று (31) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக COVID-19 கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

Astrazeneca தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதால், நாட்டில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Astrazeneca தடுப்பூசியை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஜனவரி 29 ஆம் திகதி தொடக்கம் தடுபூசிகளை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுபூசி ஏற்றுவதற்காக 2,36,000 தடுப்பூசிகள் எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, Oxford astrazeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

12, 64,000 Oxford astrazeneca தடுப்பூசி நாட்டிற்கு கிடைத்துள்ளதுடன், அவற்றில் 9 இலட்சத்திற்கும் அதிகமான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Astrazeneca தடுப்பூசியை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அதிகாரமுள்ள நிறுவனமாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளது.

இந்தியாவின் Serum நிறுவனத்திடமிருந்து 15 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது.

அவற்றில் 5 இலட்சம் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடந்த மாதம் மேலும் 05 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், திட்டமிட்டவாறு இதுவரையில் அந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவில்லை.

இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் Sputnik-V கொரோனா தடுப்பூசியில் , 70 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன மற்றும் Sputnik-V தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ளும் ரஷ்யாவின் கெமிலியா நிறுவனத்தின் பிரதிநிதிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதற்கமைய, Sputnik-V தடுப்பூசிகளில் ஒரு தொகை அடுத்த மாதத்தின் இடைப்பகுதியில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.