இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் - ரிஷாட் அனுதாபம்
- ஊடகப்பிரிவு -
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பேராயரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பானது, அனைத்து இன மக்களுக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
அவர் சகல இன மக்களினதும் கௌரவத்துக்கு உரியவராகவும் நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். அது மாத்திரமின்றி அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். இன, மத பேதங்களுக்கு அப்பால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடிய கரிசனை செழுத்திய பேராயர், துன்பப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பேதமுமின்றி உதவி புரிந்தவர்.
அவர் ஏழை மக்களின் அன்புத் தோழனாக இருந்தது மாத்திரமின்றி, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டார். அனைத்து மத பெரியார்கள், அரசியல் பிரதிநிதிகள், சாதாரண மக்கள் ஆகியோருடன் நல்லுறவைப் பேணி, சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தார். கத்தோலிக்க மக்களுக்கு அன்னார் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார்.
அவரது இழப்பு கத்தோலிக்க சமூகத்துக்கு மாத்திரமின்றி நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்” என்றார்.
Post a Comment