தீவிரவாத துன்பியல் வலி இன்னும் ஆறவில்லை - தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது - ஜனாதிபதி
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் திருநீற்றுப் புதன் தொடங்கி 40 நாள் தவக் காலத்தில் கிறிஸ்துவின் துன்பம், மரணம் மற்றும் இறப்பை நினைவுகூரும் ஆன்மீக கிரியைகளில் ஈடுபடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறன்று இயேசு பிரானின் உயிர்த்தெழுதலின் வெற்றிகரமான தருணத்தை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
இக்காலப் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்கும் நோக்கத்துடன் இயேசு நாதர் சிலுவையில் துன்பப்பட்டு மரணத்தை வென்று மீண்டும் உயிர்த்தெழுந்து விடுதலையைப் பெற்றுத் தந்ததை நினைவு கூர்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடனும் கௌரவத்துடனும் உயிர்த்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காக நேர்ந்தது. இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இதயங்களின் வலி இன்னும் ஆறவில்லை. அந்த பாவச் செயலை புரிந்த குற்றவாளிகளான தனிநபர்களுக்கோ குழுக்களுக்கோ சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது. அதே சமயம் சமூகத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது. இன்று உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் அன்பும் இரக்கமும் கொண்ட ஒரு மனிதாபிமான சமூகத்தில் வாழவும் இந்த உயிர்த்த நாளில் நாம் உறுதிகொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் இனிய உயிர்த்த நாள் வாழ்த்துக்கள்
கோட்டாபய ராஜபக்ஷ
Post a Comment