இந்தியாவின் புலமைப் பரிசில்கள் - இலங்கையர்கள் விண்ணப்பிக்கலாம்
கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் (ICCR) 2021-2022 கல்வி ஆண்டுக்கான பின்வரும் புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது:
நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/மருத்துவ உதவி & ஆடை வடிவமைப்பு கற்கை நெறி தவிர்ந்தவை) அனைத்து பட்டப்படிப்பு (Undergraduate) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது.
மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணைமருத்துவம் & ஆடை வடிவமைப்பு கற்கைநெறி தவிர்ந்தவை) முதுமாணிப் பட்டக் (Masters Degrees) கற்கைகளை உள்ளடக்குகிறது. எவ்வாறாயினும், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம்: B.E அல்லது B.Tech பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள்.
பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டம்: மருத்துவம்/ துணைமருத்துவம் & ஆடை வடிவமைப்புக் கற்கை நெறிகள் தவிர்த்து அனைத்துத் துறைகளின் கலாநிதிப் பட்டப் படிப்புக்கள் (PhD Degrees).
இந்தப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக தகுதி வாய்ந்த இலங்கைப் பிரஜைகளை இந்திய அரசாங்கம் தெரிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டங்களுக்கான கற்கைகளைத் தொடர்வதற்கு விண்ணப்பதாரிகளின் தெரிவு செய்தல் இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சுடனான கலந்தாலோசனையில் மேற்கொள்ளப்படும். அனைத்துப் புலமைப் பரிசில்களும் கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கும் கல்விக் கட்டணம், மாதாந்த அடிப்படைச் சலுகைக் கட்டணம், மற்றும் புத்தகங்கள் & காகிதாதிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்கலைக் கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளும் வழங்கப்படும். மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து ஐ.சி.சி.ஆர் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கும், இந்தியாவிலுள்ள அண்மித்த பயணச் சேரிடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும், இவற்றை விட ஏனைய பல்வேறு அனுகூலங்களும் வழங்கப்படும். தேவையான தகவல்களை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கல்வி அமைச்சு அல்லது இந்திய உயர் ஸ்தானிகராலயம் - கொழும்பு ஆகியவற்றை அணுக முடியும்.
* * * * *
கொழும்பு 01 ஏப்ரல் 2021
Post a Comment