ரணிலின் முட்டாள்தனமும், மைத்திரியின் வினைத்திறனற்ற செயற்பாடும்
அவர்களின் இந்த செயற்பாடுகளே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு சக்திமிக்க காரணியாக அமைந்தது என நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் சரத் விஜயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கு மிகவும் கடுமையாக பாடுபட்டோம்.
அந்தவகையில் கஷ்டப்பட்டு உருவாக்கியவை எப்போதும் வீண்போகாது என்று நாம் இன்றும் நம்பிக்கை கொள்கின்றோம்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது அதனை தாங்கள் பாதுகாப்போம், நாட்டின் வளங்கள் வெளிநாட்டினருக்கு விற்கப்படுகின்றது உள்ளிட்ட பொய்யான பிரசாரங்களை கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது.
மேலும், நாட்டிலுள்ள விகாரைகளில் தர்ம உபதேசம் வழங்குவதைப்போன்று கோட்டபாயவினால்தான் சிறந்த ஆட்சியை முன்னெடுக்க முடியுமென மக்கள் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. இவைகளை எல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது.
இவ்வாறு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தலையிட்ட துறவிகள் கூட இப்போது அரசாங்கத்தை தூற்றுகிறார்கள்.
ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள், அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி 1 வருடம் கடந்த போதிலும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த மக்களும், ஆட்சி மீது தற்போது வெறுப்படைய ஆரம்பித்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படுமென கூறி ஆணைக்குழு உருவாக்கி விசாரணை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் உரிய நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மேலும் அரச சேவையாளர்களின் தற்போதைய நிலைமை என்ன?, மக்களின் வாழ்வாதார நிலைமை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இதேவேளை புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதி விவகாரத்திலும் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னும் முன்னெடுக்கவில்லை.
ஆகவே இனியாவது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment