கஞ்சி பகிர்ந்தளித்தல், இப்தார், 50க்கு மேற்பட்டோர் கூட்டாக தொழுவதற்கும் சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக் கொள்ளுங்கள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை மற்றும் நோன்பு கால தராவீஹ் போன்ற விஷேட தொழுகைகளில் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையானோருடன் ஜமாஅத்தாக தொழுவதற்கு அந்தந்த பிரதேச சுகாதார சேவை அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரிடம் எழுத்துமூல அனுமதியை பெற்றுக்கொள்ளும்படி வக்புசபை பள்ளிவாசல் நிர்வாகிகளைக் கோரியுள்ளது.
மேலும் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி பகிர்ந்தளிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து எழுத்துமூல அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில், ‘ஜும்ஆ உட்பட ஜமாஅத்தாக தொழுவதற்கு தற்போது கொவிட் 19 வழிகாட்டல்களின் கீழ் 50 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரமழானில் பெரும் எண்ணிக்கையானோர் அமல்களில் ஈடுபடுவதால் இந்த எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அந்தந்த பிரதேச சுகாதார சேவை அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் எழுத்துமூல அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் வக்புசபை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே பள்ளிவாசல் நிர்வாகங்கள் தங்களது பிரதேச சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்படி வேண்டப்படுகிறார்கள்.
இப்தார் நிகழ்வுகள் ஏற்பாடு செய்து கொள்வதற்கும், கஞ்சி பகிர்ந்தளிப்பதற்கும் இந்நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். நாட்டில் சில பகுதிகளில் சில பள்ளிவாசல் நிர்வாகங்கள் கஞ்சி பகிர்ந்தளிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்நடைமுறையை ஏனைய பள்ளிவாசல்களும் பின்பற்றலாம்.
எழுத்து மூல அனுமதியினைப் பெற்றுக்கொள்ளும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொழுகைகளின் போதும், கஞ்சி பகிர்ந்தளித்தல் மற்றும் இப்தார் நிகழ்வுகளிலும் கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றார்.-Vidivelli
Post a Comment