Header Ads



அரசாங்கத்துக்குள் கருத்து மோதல்கள், அரசியல் மீண்டும் சூடுபிடிப்பு, 3 பேருக்கு புதிதாக அமைச்சரவை பதவி


- மகேஸ்வரி விஜயானந்தன் -

அரசாங்கத்துக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், கூட்டாகவும் தனித்தனியாகவும் சில தரப்பினரை சந்தித்து வருகின்றனர். இதனால் கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருக்கின்ற கட்சிகளில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கடந்தவாரம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 இதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும். பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல்களில் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளே பங்கேற்றிருந்தனர். மைத்திரிபால சிறிசேன, முதல்தடவையாக அச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

கடந்த 8ஆம் திகதியன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், அபே ஜனபல வேக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதம செயலாளர் டியு குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாவும் பங்கேற்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன், மைத்திரிபால சிறிசேனவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திப்பு 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு, நேற்று முன்தினம் (10) இடம்பெற்றுள்ளது. இதில், அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தே, இருதரப்பினரும் நீண்டநேரம்  கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. 

புத்தாண்டு பரிசு 

இந்நிலையில், பிறக்கவிருக்கும் பிலவ புத்தாண்டுக்குப் பின்னர், அமைச்சரவையில் மாற்றமொன்று செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஆளும் கட்சியிலிருக்கும்  சிரேஷ்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள், மூவருக்கே இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


 

No comments

Powered by Blogger.