Header Ads



கொரோனா 2 ஆம் அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம், கொலைக்குற்றம் சுமத்தினால் தவறில்லை - சென்னை நீதிமன்றம்


தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் 77 வேட்பளார்கள் போட்டியிடுவதால் இரண்டு இடங்களுக்குப் பதிலாக மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.

வாக்குப் பதிவு தினத்தன்று மட்டும்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறைப்படி நடந்ததாகவும் பிரசாரத்தின்போது எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது அலை பரவுவதற்கு தேர்தல் ஆணையம்தான் முக்கியக் காரணம் என நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்

அரசியல் கட்சிகள், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறைப்படி பின்பற்றவில்லை. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முக கவசத்தை யாரும் அணியவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்று கூறிய நீதிமன்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தது.

ஒரு தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, சுயேச்சை வேட்பாளர்களின் சார்பில் இரண்டு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மட்டுமே வாக்கு எண்ணும் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிது என்பதை விரிவான அறிக்கையில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் என நான்கு மாநிலம் மற்றும் ஒரு யூனியம் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளா மற்றும் புதுச்சேரியிலும் ஒரே கட்ட தேர்தலாக ஏப்ரல் 6ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்க மாநில தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்த வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.