ஆப்கானிஸ்தானில் 2,488 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் - செப்டெம்பரில் தனது படைகளை முற்றாக விலக்க ஜோ பைடன் உறுதி
சுமார் 20 ஆண்டு காலம் ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபன்களை எதிர்த்துப் போராடிவரும் அமெரிக்கப் படையினரை முற்றாக விலக்கிக் கொள்ள உள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவின் நெடிய போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய நேரம் இது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது துருப்புகளை விலக்கிக்கொண்ட பிறகும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும். ஆனால், ராணுவ ரீதியாக அல்ல என்று குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்காவில் பயணிகள் விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள் உலக வர்த்தக மையம் என்று அழைக்கப்பட்ட வானுயர்ந்த இரட்டை கோபுரங்கள் மீது மோதித் தகர்த்து உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் (செப்டம்பர் 11 தாக்குதல்) நடந்த பிறகு 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது முதல் முறையாக வான் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது அமெரிக்கா.
வெள்ளை மாளிகையில் அப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்த அறையில் இருந்து தற்போது இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான உரையை ஆற்றியிருக்கிறார் பைடன்.
செப்டம்பர் 11 தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த படை விலக்கல் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேட்டோ கூட்டணி நாடுகள் சார்பில் ஆப்கானிஸ்தானில் 9,600 படையினர் உள்ளனர். இதில் அமெரிக்கப் படையினர் மட்டும் குறைந்தது 2,500 பேர்.
ஆப்கானிஸ்தானில் களத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் எண்ணிக்கை மாறிவருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 3,500க்குப் பக்கமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைப்பதாக தாலிபன்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் இன்னும் கடைபிடிக்கத் தவறிவருகிறார்கள் என்று நேட்டோ மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளும் நிலைமைக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதன்கிழமை தான் பைடனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அமெரிக்க முடிவை மதிப்பதாகவும், சுமுகமான முறையில் இந்த மாற்றம் நிகழ்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து வேலை செய்வதாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் வல்லமை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
"படைகளை விலக்கிக் கொள்ள உகந்த நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கையில், மாறுபட்ட விளைவு ஏற்படும் என்று எதிர்பார்த்து நாம் தொடர்ந்து நமது படைகளை ஆப்கானிஸ்தானில் அதிகப்படுத்திக்கொண்டோ, நீட்டித்துக்கொண்டோ இருக்க முடியாது" என்று கூறியுள்ளார் பைடன்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள போரை நிர்வகிக்கும் 4-வது அமெரிக்க அதிபர் இவர்.
"ஆப்கானிஸ்தானில் நாம் ராணுவரீதியாக ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்றாலும், ராஜீய, மனிதாபிமான பணிகள் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்று கூறியுள்ளார் பைடன்.
3 லட்சம் பேரைக் கொண்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கவும் அவர் உறுதி வழங்கியுள்ளார்.
"20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரத் தாக்குதல் காரணமாக நாம் ஆப்கானிஸ்தான் சென்றோம். 2021-ம் ஆண்டிலும் நாம் அங்கே தொடர்ந்து இருப்பதற்கு அது காரணமாக முடியாது" என்றும் கூறியுள்ளார் அதிபர் பைடன்.
சைபர் தாக்குதல்கள், சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், "நம் முன்பாக இருக்கும் சவால்களில் கவனம் செலுத்தவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தானில் தற்போது பணியாற்றி வரும் பல ராணுவ வீரர்களின் தந்தையர்களும் அதே சண்டையில் அங்கே பணியாற்றியவர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட 2,488 அமெரிக்கப் படையினர் புதைக்கப்பட்ட ஏர்லிங்டன் தேசியக் கல்லறைக்குச் சென்று புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார் பைடன்.
மே 1-ம் தேதி படைகளை விலக்கிக் கொள்ள காலக்கெடு நிர்ணயித்திருந்தார் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப். இப்போது பைடன் இந்த காலக்கெடுவை நீட்டிக்கிறார்.
2020 பிப்ரவரி மாதம் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், நேட்டோ கூட்டணியும் 2021 மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. அல் காய்தாவோ, பிற தீவிரவாத அமைப்புகளோ தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட தாலிபன்கள் அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தாலிபன்கள் பங்கெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அது முதல் சர்வதேசப் படையினரை தாலிபன்கள் தாக்குவதில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளோடு தாலிபன்கள் தொடர்ந்து மோதி வருகின்றனர். மே 1ம் தேதிக்கு மேல் தங்கள் நாட்டில் இருக்கும் வெளிநாட்டுப் படையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பவோதாக கடந்த மாதம் மிரட்டியிருக்கிறது தாலிபன். BBC
Post a Comment