Header Ads



பள்ளிவாசலில் 100 பேர் தொழலாம், கஞ்சியை தவிருங்கள் (முழு விபரம் - தவறாமல் வாசியுங்கள்) சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு)

Ajaaz Mohamed -


இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

பொது ஒன்று கூடல்களின் போது தொற்றுப் பரவலுக்கான சாத்தியம் அதிகம் என்ற வகையில் பள்ளிவாசலுக்கு வணக்க வழிபாடுகளுக்காக வருபவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமழான் காலப்பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட முடியும்

பள்ளிவாசலுக்குள்ளோ, வெளிப்பள்ளிவாசலிலோ, நுழைவாயிலிலோ, பள்ளிக்கு வெளியிலோ கூட்டமாகத் திரள்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும்

சமூக இடைவெளியைப் பேணுவதற்கு வசதியாக ஒரு மீட்டர் இடைவெளி பள்ளிவாயிலில் அடையாளமிடப்பட்டிருக்க வேண்டும்

தொழுகை நடைபெறும் இடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணத் தக்க வகையிலான எண்ணிக்கையினரை அனுமதிக்க முடியும். இந்த ஒழுங்கில் ஒரே நேரத்தில் பள்ளிவாசலில் இருக்க முடியுமானோர் எண்ணிக்கை உச்சபட்சம் 100 பேராகும்.

தொழுகையாளிகள் தமக்கிடையில் எல்லாப் பக்கங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும். தமக்கான முஸல்லாக்களை ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்

தொழுகையில் ஈடுபடுபவர்களைத் தாண்டிச் செல்லாத வகையில் தொழுகையாளிகளுக்கிடையில் இடைவெளி பேணப்பட வேண்டும்

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பள்ளிக்கு வருபவர்கள் கொவிட் 19 சுகாதார ஒழுங்குகளைப் பேணுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் முறையான பாதுகாப்புக் கவசங்களை (PPE) – முகக்கவசம், முழுமையாக உடலை மறைக்கும் அங்கி, தலைக்கவசம், கையுறை – அணிந்திருக்க வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் நுழைபவர்களின் உடல் உஷ்ணத்தை இவர்கள் பரிசோதிக்க வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் நுழையும் அனைவரும் நாசியையும் வாயையும் மறைக்கும் வகையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவை முறையாகவும் பாதுகாப்பாகவும் அணியப்பட வேண்டும் என்பதோடு கைகளைக் கழுவாமல் இவற்றைத் தொடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பள்ளிவாசலின் நுழைவாயிலில் கைகைளைக் கழுவுவதற்கு சவர்க்காரத்துடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்

அனைவரும் கைகளை முறையாகக் கழுவிய பின்னரே பள்ளிவாசலினுள் நுழைய வேண்டும்

தொழுகையாளிகளின் பாவனைக்காக பள்ளிவாசலினுள் இடத்துக்கிடம் சனிடைசர்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்

கைலாகு கொடுப்பதையோ வேறேதேனும் வகையில் ஸ்பரிசிப்பதையோ தவிர்ந்து கொள்ள வேண்டும்

கைகளைக் கழுவாமல் முகத்தை (கண், மூக்கு, வாய்) தொடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்

பள்ளிவாசலில் நுழையும் அனைவரும் சுவாசம் சார்ந்த ஒழுங்குகளைப் பேண வேண்டும் (தும்மும் போதும் இருமும் போதும் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளல், டிஷ்யூக்களைப் பாவித்தல், அவற்றை வீசுவதற்கான குப்பைத் தொட்டிகளை வைத்தல்..)

சொந்தப் பாவனைக்குரிய மோபைல், பேனை போன்ற விடயங்களை அடுத்தவர் பாவனைக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்

அல் குர்ஆனையோ பள்ளிவாசலில் உள்ள ஏனைய நூல்களையோ பாவிக்க முன்னரும் பாவித்த பின்னரும் கைகளை கிருமி நீக்கம் செய்து கொள்ள வேண்டும்

பள்ளிவாசலில் கஞ்சி விநியோகிப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்

வழிபாட்டுக்கு வருபவர்களுக்கு எந்த வித உணவுகளோ பானங்களோ பள்ளிவாசலினுள்ளோ வெளியிலோ வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்

பள்ளிவாசலில் வுழு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளிலேயே வுழு செய்து வர வேண்டும். வுழு செய்ய நேரிட்டால் குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான ஹவ்ல் பயன்படுத்தப்படுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்

காய்ச்சல், இருமல், மூக்கு வடிதல், தொண்டை அழற்சி, சுவாசிப்பதில் கஷ்டம் போன்ற கொவிட் 19 அறிகுறிகள் ஏதேனும் இருப்பவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும்

பள்ளிவாசலினுள் காற்றோட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

தொடுவதற்கு அவசியமில்லாத (Pedal Type wastebins) குப்பைத் தொட்டிகள் பாவிக்கப்பட வேண்டும் என்பதோடு அவை முறையாக அகற்றப்பட வேண்டும்

மல சல கூடங்கள் போதியளவு நீரும் சவர்க்காரமும் உள்ளதாக இருக்க வேண்டும். இவற்றை சுத்தமாக வைத்திருப்பதற்கான ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்

தனிமைப்படுத்தலில் உள்ள எவரும் தொழுகையில் கலந்து கொள்ளக் கூடாது

தரை மற்றும் தொடக் கூடிய அனைத்து இடங்களும் அடிக்கடி துப்புரவு செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்

ஒவ்வொரு தொழுகை வேளையின் பின்னரும் தரை மொப் செய்யப்படவோ கழுவப்படவோ வேண்டும்

தொழுகை முடிந்த பின்னர் பள்ளிவாசல் வளவினுள் வீணாகச் சுற்றித் திரிவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்

பிரதேசத்தின் பொதுச் சுகாதார அதிகாரி (PHI) ஊடாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி இவற்றின் நடைமுறையை கண்காணிக்க வேண்டும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள DGHS/Covid 19/347/2021 என இலக்கமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையின் பிரதிகள் புத்தசாசனம் மற்றும் மத கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், தேசிய கொவிட் 19 தடுப்பு நிலையத்தின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


2 comments:

  1. Brother Ajaaz Mohamed,

    I visited site to read the message from what the reference code you have given in the article. But it is not related to masjid administration during Ramadaan. It is for Covid burial.

    Kindly upload the correct Reference... related to masjid procedure if you have..

    This is what I show from the Reference:

    http://www.health.gov.lk/moh_final/english/public/elfinder/files/feturesArtical/2021/SOPtrasportBurial.pdf

    ReplyDelete
  2. DGHS?Covid19/347/2021 ..... This what you have given...

    ReplyDelete

Powered by Blogger.