ஜெய்லானியில் 100 அடி உயர தாதுகோபுரம், பள்ளிவாசல் பாதுகாக்கப்படும் என்கிறார் நெல்லிகல தேரர்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
வரலாற்று புகழ் பெற்ற ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசத்தில் சுரங்க மலையில் 100 அடி உயரமான தாதுகோபுரம் ஒன்றினை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
சுரங்கமலை நூற்றாண்டு காலமாக ஜெய்லானி பள்ளிவாசலின் பொறுப்பில் அதன் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்துள்ளது. இந்த சுரங்க மலையில் தற்போது மூன்று புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிலைகளில் இரண்டு சிலைகள் சுரங்கத்தின் வளைவில் வைக்கப்பட்டுள்ளன.
சுரங்கமலை ஜெய்லானி பள்ளிவாசலிலிருந்தும் சுமார் 600 தூரத்திலே அமைந்துள்ளது. 100 அடி உயரமான தாதுகோபுரம் நிர்மாணிக்கப்படுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி நோன்மதி தினத்தில் இடம்பெற்றது.
அன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,தொல்பொருள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவெல, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், அரசாங்க அதிபர் என மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நெல்லிகல சர்வதேச பெளத்த மத்திய நிலையத்தின் தலைமை பிக்குவான வத்துர கும்புர தம்மாரதன தேரரின் தலைமையிலான குழுவினர் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கூரகல பிரதேசம் பெளத்த வரலாற்று புகழ்மிக்கதாகும். இப்பிரதேசத்தை பாதுகாப்பதற்கான100 அடி உயரமான தாது கோபுரமொன்று நிர்மாணிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது என நெல்லிகல வத்துரகும்புர தம்மாரதன தேரர் குறிப்பிட்டார்.
தற்போது கூரகல சுரங்கமலையில் 100 அடி உயரமான தாதுகோபுர நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கென 2 இலட்சத்து 40 ஆயிரம் கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் சுமார் 30ஆயிரம்பேர் கலந்து கொண்டதாக ஜெய்லானி பள்ளிவாசலின் முகாமையாளர் எம்.எஸ்.எம். ரபியுத்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
ஜெய்லானி பள்ளிவாசலின் நிர்வாக சபைத்தலைவர் எம்.எஸ்.எம். நபீஸைத் தொடர்புகொண்டபோது, கூரகல மலையில் 100 அடி உயரமான தாதுகோபுரம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இப்பகுதியை தொல்பொருள் பாதுகாப்பு வலயமாக தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழேயே இந்தப் பணிகள் இடம் பெற்று வருகின்றன என்றார்.
ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதேசத்துக்குள் பல தசாப்தங்களுக்கு முன்பும் தாதுகோபுரம் ஒன்று நிர்மாணிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக பதவிவகித்த பதியுதீன் மஹ்மூத் இதற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அதன் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது. அரசாங்கம் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜெய்லானி பள்ளிவாசலின் முகாமையாளராக கடந்த சில தசாப்த காலமாக பணியாற்றிவரும் எம்.எஸ்.எம். ரபியுத்தீனை விடிவெள்ளி தொடர்பு கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பள்ளிவாசலின் திருத்த வேலைகள், மற்றும் நிறப்பூச்சு வேலைகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது. கந்தூரி வைபவம் நடைபெறும் மாதத்தில் மாத்திரமே இந்த வேலைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இங்குள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவது கூட எமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. என்னால் பள்ளிவாசலுக்குள் இரவு வேளையில் தங்கியிருக்க முடியாது. அதுவும் தடைசெய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பின்பு எனக்கென உள்ள தனியான அறையிலே நான் தங்கவேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கந்தூரி வைபவத்துக்கு முஸ்லிம்கள் வருகை தந்தார்கள். 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டார்கள். இவ்வாறான கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் பள்ளிவாசலுக்குள் அமைந்துள்ள சியாரத்தின் மேல் கருங்கல் ஒன்று உயரத்திலிருந்து வீழ்ந்து பல மாதங்கள் கடந்துவிட்டபோதும் அதனை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை அப்புறப்படுத்துவதற்கும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றாக வேண்டும் எனவும் கூறினார்.
ஜெய்லானி பள்ளிவாசலின் நிர்வாகத்தை வக்பு சபை 2016 ஆம் ஆண்டு ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்தது. அதற்கு முன்பு பள்ளிவாசலின் நிர்வாகத்தின் தலைவியாக ரொசானா அபுசாலியே பதவி வகித்தார். பள்ளிவாசலின் முன்னாள் தலைவி ரொசானா அபுசாலியை தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவிய போது ஜெய்லானி பள்ளிவாசலின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
எந்தச் சூழ்நிலையிலும் பள்ளிவாசல் பாதுகாக்கப்படும். பள்ளிவாசல் உடைக்கப்பட மாட்டாது என நெல்லியகல பன்சலையின் தேரர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூரகல ஜெய்லானி பள்ளிவாசல் பௌத்த மரபுரிமைகள் உள்ளடங்கிய தொல்பொருள் வலயத்திலே அமைந்துள்ளதெனவும் அப் பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் எனவும் 2010 – 2015 காலப்பகுதியில் பொதுபல சேனா பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் படி பள்ளவாசலுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எமது வரலாற்று புகழ்மிக்க சான்றுகளை பாதுகாத்துக் கொள்வது சமூகத்தின் பொறுப்பாகும்.- Vidivelli
....Punishment from Allah.
ReplyDelete