டுபாய், அவுஸ்திரேலியா, கட்டாரிலுள்ள 10 பேரை இலங்கைக்கு அழைத்து விசாரணை செய்வது குறித்து தீவிர அவதானம்
(எம்.எப்.எம்.பஸீர்)
முப்பது வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்ட, 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்த, உயிர்த்த ஞாயிறு தினத்தன்றான தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் குறித்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வெளிநாட்டில் உள்ள 10 பேரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம் ( டுபாய்), மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள 10 பேரை அழைத்து வரவே இவ்வாறு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
குறித்த 10 பேரும் இலங்கையில் பல்வேறு அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கும் விசாரணையாளர்களுக்கும் தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க இவ்வாரறு அவர்களை நடடுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்ப்ட்டு வருவதாக அறிய முடிகின்றது.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்க்ள் வெளிநாடுகளில் கைதுச் செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த 10 பேர் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 270 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 200 இற்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையில் ஏனையோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயம் ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களும் கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
அதே தினம் பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டன் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி
Post a Comment