ஜனாஸாக்களுடன் வருபவர்களால், ஓட்டமாவடி முடங்கும் அபாயம் - அமீர் அலி
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அதிகமானோர், ஓட்டமாவடிக்கு வருவதால், ஓட்டமாவடி முடங்கும் அபாயம் ஏற்படுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எச்சரித்தார்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்கின்ற பணிகள், ஓட்டமாவடி, மஜ்மா நகர் பகுதியில் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் இதன்படி, நேற்று (09) பிற்பகல் வரை 39 ஜனாஸாக்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இன்று (10) 11 ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஓட்டமாவடி பிரதேசத்துக்கு, ஜனாஸாக்களோடு மிக அதிகம் பேர் வருகின்றமையால், எதிர்காலத்தில் புதிய தொற்றுக்கு அந்தப் பிரதேசம் ஆளாகிக் கொள்ள முடியும். இது தொடர்பில் இராணுவத்தினரும் சுகாதாரப் பிரிவினரும் சுட்டிக்காட்டுகின்றனர். அத்தோடு, இவ்வாறு கூடுதலான நபர்களின் வருகையால் இந்தப் பணியை அவர்களால் சிறப்பாக செய்ய முடியாத ஒரு நிலவரம் காணப்படுவதாகவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இதுவரை ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட ஜனாஸாக்கள் எவ்வித பிரச்சினைகளும் இல்லாது, ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்களால் மிகுந்த தியாகத்துடன், இஸ்லாமிய மார்க்க முறைப்படி, உலமாக்களின் வழி நடத்தலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
“இந்த ஜனாஸாக்கள் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் குளிரூட்டிகளில் வைக்கப்பட்ட ஜனாஸாக்கள் என்ற அடிப்படையிலே தொற்றுக்கள் குறைவாக இருக்கும். ஆனால், இனி வரவுள்ள ஜனாஸாக்கள் புதிய ஜனாஸாக்கள் என்கின்ற படியால், அவர்களோடு அதிகம் பேர் வருகின்ற காரணத்தால் அதனோடு சிலவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து செல்லலாம். இதனால் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
“இதனால் ஓட்டமாவடி பிரதேசம் முடக்கப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விடலாம் என்று பாதுகாப்புத் தரப்பினரால் அவசரமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
“எனவே, தயவுசெய்து வெளியூர்களில் இருந்து வருகின்றவர்கள், முடிந்தவரை தவிர்த்துக் கொண்டு, இந்தப் பணியை சிறப்பாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என்றார்.
Post a Comment