Header Ads



கொசுக்கள், நுளம்புத்தொல்லை, துர்நாற்றம் ஏற்படுவதை தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி


திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

திண்மக்கழிவு முகாமைத்துவம் உலகின் பல நாடுகளுக்கும், இலங்கைக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத திண்மக்கழிவுகள் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் மாசடைதல் மற்றும் மண்ணில் பல்வேறு இரசாயனங்கள் சேர்தல் போன்ற பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

கழிவு முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஜூலை மாதம் 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ரொஹான் செனவிரத்ன ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

நிபுணர் குழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் முழுமையானதொரு பின்தொடரல் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கழிவு முகாமைத்துவத்தில் வெளி சுற்றுச்சூழல் காரணிகள் குறித்த அக்கறை இல்லாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கொசுக்கள் மற்றும் நுளம்புத் தொல்லையையும் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும, காமினி லொகுகே, மஹிந்த அமவீர, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.03.31

1 comment:

Powered by Blogger.