தினேசின் கடிதத்தால் இலங்கைக்கு எதிராக, கிளர்ந்தெழுந்த மியன்மார் வாசிகள்
இதனூடாக, இலங்கை, மறைமுகமான முறையில் மியன்மாரின் இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் தமது எதிர்ப்பை வெளியிடும் மியன்மார் பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா கூட்டமைப்பு என்ற பிம்ஸ்ரெக் அமைப்பின் தற்போதைய தலைமைத்துவத்தை இலங்கை வகிக்கின்றது.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து முதலான நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கூட்டமைப்பின் 17 ஆவது அமைச்சர்கள் மாநாடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இணையவழி மெய்நிகர் மாநாடாக கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் கையொப்பத்துடன், மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரான வுன்னா மாவுங் லுவினுக்கு (Wunna Maung Lwin ) அழைப்பு விடுத்து, கடந்த 2ஆம் திகதி குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கடிதமொன்றை அனுப்பியதன் மூலம், மியன்மார் ஆட்சியை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக மியன்மார் பிரஜைகள் தங்களது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.
#ShameOnYouSriLanka என்ற ஹேஷ் டெக் ஊடாக ட்விட்டரில் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, மியன்மார் தலைவர் ஆன் ஷாங் சூகியின் ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்கு எதிராக அந்த நாட்டில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நேற்றைய நாளில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, மியன்மார் ஆட்சியைக் கண்டித்துள்ளது.
இதேநேரம், மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய நாளில் கொழும்பு – ப்ளவர் வீதியில் உள்ள மியன்மார் தூதரக காரியாலயத்திற்கு முன்னால், போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மியன்மார் மக்கள் ஒத்துழைப்பு குழுவினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, பிம்ஸ்ரெக் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் குறித்து, வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிம்ஸ்ரெக் மாநாட்டுக்கு தலைமை தாங்கும் இலங்கை, இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள 5ஆவது உச்சிமாநாட்டின் ஆவணங்களை இறுதிப்படுத்தும் நோக்குடன், அது சம்பந்தமான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக மியன்மார் உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment