பசறை விபத்துக்கு பொலிசாரும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும்
14 பேர் மரணித்த குறித்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி ஆகியோரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு விபத்தின் பின்னர் தப்பி சென்றிருந்த பாரவூர்தியின் சாரதியும் நேற்று கைது செய்யப்பட்டார்.
விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் மது போதையில் இருந்தாரா? என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பேருந்து விபத்துக்குள்ளான பசறை - 13ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளில் எச்சரிக்கை சமிக்ஞைகளை பொறுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் பேருந்து சாரதியை மாத்திரம் குற்றஞ்சாட்டவது பொறுத்தமற்றதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் காவல்துறையினரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் காணப்பட்ட கல்லை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதற்கான பொறுப்பை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று பாரவூர்தியின் சாரதியும் இந்த விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டும்.
அத்துடன் இவ்வாறு விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுமாயின் குறித்த பகுதியில் எச்சரிக்கை சமிக்ஞைகள் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment