Header Ads



இது எம்மீதான சமூகக் கடமை, இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம்.


- அபூ அஹ்மத் ஷபீக் - 

அன்பான பெற்றோர்/ பாதுகாவலர்களே,  இலங்கை முஸ்லிம் சமூக, சமய, அரசியல் மற்றும் கல்விசார் தலைமைகளே 

அஸ்ஸலாமு அலைக்கும் வ வ. 

இது நீங்கள் கூடுதல் கவனத்திற் கொண்டு, அவசரமாக செயற்பட  வேண்டிய முக்கியதொரு  தகவலாகும்.  

நாட்டின் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்ட  பல்வேறு பகுதிகளிலும்  வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றிற்காக தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும், எமது முஸ்லிம் சமூகத்தில் ஒரு சத விகிதத்திற்கும் குறைவானவர்களே பாதுகாப்புத் துறையில் கடமை புறிந்து வருவதாகவும், ஆகவே விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்பு தகுதியைடைய எமது வாலிபர்கள் தமது விண்ணப்பங்களை அவசரமாகச் சமர்பிக்குமாறும் கடந்த 02, 03 வார காலமாக சமூக ஊடகங்களுக்கூடாக  செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

விண்ணப்ப முடிவு திகதி மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் எமது சமூகம் குறித்த செய்தியை அவசர அவசரமாக மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதில் குறியாக இருக்கின்றதே தவிர மிகப் பெரும்பாலானோர் தகுதியுடைய தமது பிள்ளைகளை அதற்காக தயார்படுத்துவதில் பின்வாங்கி வருகின்றனர். 

மார்க்க அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அவகாசம், நல்ல சம்பளத்துடன் கூடிய  மேலதிகக் கொடுப்பனவுகள், ஹலாலான ஆகாரம், மேலும் பல வரப்பிரசாதங்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக எமது சமூகத்தைத் சார்ந்த சில பாதுகாப்பு உயர் நிலை அதிகாரிகள் உறுத்திப்படத் தெரிவித்து, விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்ற போதிலும் எமது சமூகம் தகுதியுள்ள தமது வாலிபர்களைத் தயார் படுத்தி, விண்ணப்பங்களைச் சமர்பிக்கத் தயங்குகி வருகின்றனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் அல்லது உள்நாட்டில் ஏதேனும் தொழிற்சாலைகள், சுப்பர் மார்கட்டுக்கள் அல்லது கடைகளில் (போதிய கல்வி, முன் அனுபவம் இல்லாமை காரணமாக) அடிப்படைச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை விட, முச்சக்கர வண்டிகளை வைத்து ஓடிக் கொண்டிருப்பதை விட எதிர்பார்க்கப்படுகின்ற ஆகக் குறைந்த (அடிப்படைக்) கல்வி அறிவேனும் இருக்குமாயின் பாதுகாப்புத் துறையில் தாம் விரும்புகின்ற ஏதேனும் பகுதிக்கு  விண்ணப்பிப்பதன் மூலம் சிறந்த தொழில்வாய்ப்பையும், பல்வேறு வகையான அனுகூலங்களையும் பெற்றுக்  கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் இன்ஷா அள்ளாஹ். 

கணிசமான அளவு எமது முஸ்லிம் வாலிபர்கள் குறித்த  வெற்றிடங்களுக்காக தம்மை இணைத்துக் கொள்வதானது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு எமது சமூகமும் போதிய பங்களிப்புகளைச் செய்ததாக அமைந்து விடும்.  அதை விட 21/04 குண்டுத் தாக்குதலின் பின்பு எமது சமூகம் பல்வேறு வகையிலும் பாதுகாப்புத் துறையின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் குறித்த துறையின் சகல பகுதிகளிலும் எமது சமூக வாலிபர்கள் கடமையாற்றுகின்ற போது குறைந்த பட்சம் முஸ்லிம் சமூகம் பாகுபாடான முறையில் நடாத்தப்படுவதில் இருந்தும், தேவையற்ற கெடுபிடிகளைச் சந்திப்பதில் இருந்தும், அநியாயங்கள் இடம்பெறுவதில் இருந்தும்  பாதுகாக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. குறைந்த பட்சமாக குறித்த நெருக்கடிகள் ஒப்பீட்டளவில் குறைவதற்கேனும் நிச்சியம் வழிவகை செய்யும். 

பாதுகாப்பு அதிகாரிகள் எம்மிடம் சமூகமளிக்கின்ற போது அவர்களுக்கு மத்தியில் எப்போதேனும் இஸ்லாமிய பெயர் தாங்கிய யாரேனும் ஓரிருவர் இருப்பதை  நாம் அறிந்து கொள்கின்ற போது "குறித்த அதிகாரியும் உடன்  இருக்கின்றார், எமது ஆள் ஒருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சமூகம் தந்துள்ளார், இவர் வந்திருப்பாதல் நாம் பயப்பட வேண்டியதில்லை"  என்றெல்லாம் குறிப்பிட்டுத்  தம்மை ஆறுதல் படுத்திக் கொள்கின்ற நாம் குறித்த துறையில் இணைந்து சேவையாற்ற எமது பிள்ளைகளிடம் போதிய தகைமைகள் காணப்படுகின்ற போதும்  அதற்காக அவர்களைத் தயார் படுத்தி அனுப்பத் தயங்கி வரும் மனோ நிலையிலேயே இன்று வரை இருந்து வருகின்றோம்??? 

நெல் எப்படியேனும் அரிசியாகி விட வேண்டும், எனினும் எனது உலக்கை பயன்படுத்தப்படக் கூடாது என்ற மனோ நிலையிலேயே எமது சமூகத்தின் பெரும்பாலானோர் காணப்படுகின்றனர். அதனாலேயே குறித்த ஆள்சேர்ப்பு சம்பந்தமாக அவ்வப்போது தன்னை வந்து சேர்கின்ற சகல செய்திகளையும் அவசர அவசரமாக மற்றவர்களுக்குப் பகிர்ந்து விட்டுப் பொறுப்பு முடிந்தது என எண்ணிக் கொள்கின்றது எமது சமூகம். 

விண்ணப்ப முடிவுத் திகதி சற்று நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளன. ஆகவே தகுதியைட எமது வாலிபர்களுக்கான விண்ணப்பங்களை மிக அவசரமாகத் தாக்கல் செய்வதும், நேர்முகப் பரீட்சைகளுக்காக அவர்களைத் தயார் படுத்துவதும் எமது பெற்றோர்/ பாதுகாவலர்கள், எமது சமூக, சமய, அரசியல் மற்றும் கல்விசார் தலைமைகளின் பாரிய பொறுப்பாகும். 

நாட்டு முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியுள்ள பாரிய, நெருக்கடியான சூழ்நிலைகளை அவதானிக்கின்ற போது எமது முஸ்லிம் சமூகம் சார்பாகவும் போதியளவு வாலிபர்கள் பாதுகாப்புத்  துறையில் இணைந்து பங்காற்றுவது ஒரு சமூகக் கடமையாக (பர்ளு கிபாயாவாக) இருக்கலாம் என்றே கருத வேண்டியுள்ளது. 

No comments

Powered by Blogger.