திரைமறைவாக நடந்த ஆதரவு திரட்டல், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மனித உரிமை கவுன்சிலின் அதிகாரங்கள் என்ன?
"இலங்கையில் மனித உரிமைகள் கண்காணிக்கப்படுவது மற்றும் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுக்கான பொறுப்பேற்க வேண்டியதை வலியுறுத்துவது ஆகியவற்றைத் தொடர ஐநா மனித உரிமைகள் கவுன்சில் எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன். உண்மை மற்றும் நீதிக்கான தங்கள் பயணத்தில் துணிச்சலுடனும் உறுதியாகவும் இருந்த இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்," என்று செவ்வாய்க்கிழமை அன்று பிபிசியிடம் பேசிய மிஷேல் பாசிலெட் தெரிவித்தார்.
இலங்கை அரசு தற்போதைய கொள்கைகளிலிருந்து பாதை மாறி, சிறுபான்மையினர், மனித உரிமைகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் முடக்கியது. அப்பகுதியில் ஆயிரக் கணக்கான குடி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தி, உயிரிழப்புகளை அதிகப்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது.
இலங்கையிலுள்ள பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சிங்களர்கள் அல்லது தமிழர்கள் என அனைத்து சமூகத்தினரின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை தாங்கள் கொண்டு வருவதாக வாக்கெடுப்புக்கு முன்பு பிரிட்டன் தூதர் ஜூலியன் ப்ரையத்வெய்ட் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க மிஷேல் பாசிலெட் அலுவலகத்துக்கு கூடுதல் பணியாளர்கள், அதிகாரங்கள் மற்றும் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி ஆகியவற்றை வழங்க இந்தத் தீர்மானத்தின் வெற்றி வழிவகை செய்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமை அரசின் நடவடிக்கைகள் ஆழமாகவும் வேகமாகவும் ராணுவ மயமாக்கப்படுவது, நீதித் துறையின் சுதந்திரம் குறைந்து வருவது, தமிழ் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஒதுக்கப்படும் நடவடிக்கைகள் அதிகரிப்பது உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான சூழ்நிலை குறித்தும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது.
திரை மறைவாக, வாரக் கணக்கில் நடந்த ராஜாங்க ரீதியிலான ஆதரவு திரட்டல் நடவடிக்கைகளுக்கு பின்பும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக முடிந்துள்ளது.
2009ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதலின் போது நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பானவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கு ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவருக்கு இந்த தீர்மானம் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் திரட்டப்படும் ஆதாரங்களும் எதிர்காலத்தில் தண்டனை வழங்குவதற்காக பயன்படுத்தப்படலாம்.
போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவ மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு எதிர்காலங்களில் பயணம் மற்றும் பிற தடைகள் விதிக்கப்படலாம் என்று இலங்கை அரசு கவலைப்படுகிறது.
தொடர்புடைய நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று இலங்கை அரசு தொடர்ந்து வாதிட்டு வந்தது.
ஆனால் ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை மீதான மீது கடுமையான தடைகளை விதிக்கப் போதுமானதாக இல்லை என்று தமிழ் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்கள் கருதுகிறார்கள்.
போர்க் காலத்தின் போது காணாமல் போன தங்களது உறவினர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான அவர்களது காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.
ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்படவேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தீர்மானம் திருப்தி அளிக்காமல் போகலாம்.
ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்ததாக குற்றம் சாட்டப்படும் உரிமை மீறல்கள் மறக்கப்படவோ, கண்டுகொள்ளாப்படாமல் போகவோ செய்யாது என்று இந்தத் தீர்மானம் மூலம் சர்வதேச சமூகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. BBC
Post a Comment