ஆயுதங்களை மீட்பதற்கு கபீர் ஹசிம் உதவினார் - ரணில் முதன்முறையாக தெரிவிப்பு
இலங்கையிலிருந்து இயங்கும் யூடியூப் சேனலுக்கு இது தொடர்பாக வழங்கிய செவ்வியில் அவர் இதை குறிப்பிட்டார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில், கொழும்பில் உள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று ஆடம்பர விடுதிகள் ஆகியவற்றில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்களும், டெமடகோடாவில் உள்ள குடியிருப்பு வளாகம் மற்றும் டெஹிவாலாவில் உள்ள விருந்தினர் இல்லத்தில் சிறிய வெடிச்சம்பவங்களும் நடந்தன. அப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன.
இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணையை அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தாக்குதல் தொடர்பான தகவலை அப்போதைய பிரதமரிடம் உரிய முறையில் பகிரவில்லை என்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அறிக்கை தொடர்பாக கருத்து ஏதும் வெளியிடாமல் தவிர்த்து வந்த ரணில், தற்போது தனது நிலையை சமூக ஊடகம் வாயிலாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.
யூட்யூப் சேனலுக்கு அளித்த செவ்வியில், தாக்குதலுக்கு முன்னர் வண்ணாத்திவில்லு பகுதியில் ஆயுதங்களை மீட்பதற்கு தமது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கபீர் ஹசிம் உதவிகளை வழங்கியதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்தால், இயன்ற உதவியை பாதுகாப்புத்துறைக்கு வழங்கியிருப்பேன் என்று கூறிய ரணில், தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, தான் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சில் உடனடியாக கூடி, பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தோம் என கூறியுள்ளார்.
அன்றைய தினம் இரவு 9 மணி ஆகும் போது, ஈஸ்டர் தாக்குதலை நடத்திய முதலாவது குழு அடையாளம் காணப்பட்டது. அதேபோன்று, தம்புள்ளை பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி சாரதியொருவர் வழங்கிய ரகசிய தகவலுக்கு அமையவே, சாய்ந்தமருது பகுதியை நோக்கி பாதுகாப்புப் படையினர் சென்றதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி தாயகம் திரும்பும் வரும் வரை பார்த்துக்கொண்டிருந்தால், எந்தவொரு விடயமும் இடம்பெற்றிருக்காது என்றும் கேள்வியொன்றுக்கு பதிலளித்த ரணில் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டபோது தான் கொழும்பிற்கு வெளியே இருந்ததாகவும், தான் வான் மார்க்கமாகவே கொழும்பிற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை தரை வழியில் வருகை தர வேண்டாம் என பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டதாலேயே வான் வழியாக கொழும்பு வந்ததாக அவர் கூறினார்.
எனினும், 9 மணி நேரத்துக்குள்ளாக அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறிய அவர், அந்த நடவடிக்கையைக் கண்டு, வெளிநாட்டு புலனாய்வுத்துறைகளும் ஆச்சரியப்பட்டதாக குறிப்பிட்டார்.
தான் வழங்கிய உத்தரவினாலேயே 9 மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தனது உத்தரவிற்கு அமைய பாதுகாப்பு பிரிவினர் சிறந்த முறையில் செயல்பட்ட நடவடிக்கையையும் ரணில் நினைவு கூர்ந்தார்.
மத, இனவாத செயல்பாடுகளில் சஹரான் ஈடுபட்டது குறித்து தனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும், ஆனால் பயங்கரவாத செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டது பற்றி தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு தான் அழைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னரான காலத்தில் இரண்டு பாதுகாப்பு சபை கூட்டங்கள் மாத்திரமே, ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்தப்படும் வரை நடத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக வெளியான செய்தி குறித்தும், இதன்போது ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா இருக்கும் என தான் நினைக்கவில்லை என்றும், இந்தியாவிற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக எந்தவொரு புலனாய்வு தகவல்களும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என இந்தியாவே ஏற்கனவே உளவுத்தகவல்களை பகிர்ந்ததாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ரா உளவு அமைப்பால் வழங்கப்பட்ட அது தொடர்பான அறிக்கையை, தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் தான் வாசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது இதுபோன்ற தகவல்களை ஏன் தங்களால் பெற முடியவில்லை என்ற கேள்வியே தனக்கு எழுந்ததாக அவர் கூறினார். எனினும், இலங்கையிலுள்ள புலனாய்வு பிரிவினர் சரியான முறையில் செயல்பட்டதாக ரணில் தெரிவித்தார்.
BBC
Post a Comment