Header Ads



எமது இதயத்திலுள்ள நிலைப்பாடு இதுதான் - பாதுகாப்பு செயலாளர்


நாட்டை தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுத்ததால் ஸ்ரீலங்கா இராணுவத்தைப் போன்று துன்புறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளான உலகில் வேறெந்த இராணுவமும் இல்லையென பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுக்கு சீருடை சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு பாதுகாப்பு கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முப்படை தளபதிகள் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர்,

தாய் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க இராணுவ வீரர்கள் 29 ஆயிரம்  பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கவீன முற்றுள்ளனர். ஒரு கொடியின் கீழ் ஒரே சட்டத்தின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய வாய்ப்பை படை வீரர்களே உருவாக்கிக் கொடுத்தனர்.

“ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் போதும் அரசின் கட்டளைக்கு இணங்க துப்பாக்கிகளை நிலம் நோக்கி தாழ்த்தி அமைதியாக இருக்க வேண்டிய நிலை எங்களுக்கே ஏற்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட ஒவ்வொரு கொடூர தாக்குதலுக்கும் முகம் கொடுத்து, மீண்டும் யுத்தத்திற்கு தயாராக வேண்டிய நிலைமையும் எமக்கே ஏற்பட்டது.

எமக்கு உயிர்கொடுத்து தாய் நாடு மீதான பற்றை ஏற்படுத்தி எம்மை இராணுவத்திற்கு அனுப்பிய அந்த தாய் தந்தையரையும் அகௌரவப்படுத்தி நிந்திக்கும் போது அப்போதும் பூமியை பார்த்து நிற்க வேண்டி ஏற்பட்டதும் எமக்கே.

இராணுவம் என்பது மனித படுகொலை செய்வதற்கான ஒரு அமைப்பல்ல. நாட்டு மக்களின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே இராணுவத்தின் கடமையென்பது எமது இதயத்திலுள்ள நிலைப்பாடாகும்.” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.